பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

அறிந்த பின்பும் காஞ்சிரம், தன்னிடம் சுவை கூட்டிக் கொள்ள முடிகிறதோ!

ஆனால், எனக்குத் தம்பி! நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. தமது நடையும் முறையும் பலன் தாராததனை உணர்ந்து ஓர்நாள் வெட்கித் தலைகுனிந்து தமது நெஞ்சத்துக்குத் தாமே வேண்டுகோள் விடுத்துக்கொள்ளப் போகின்றனர், இன்று வாய் வலிக்க வம்புபேசிடுவோர்.

அவர்கள் அந்நிலை பெறினும் பெறாது போயினும், ஏளனத்தையும் ஏசலையும் தாங்கிக்கொள்ளும் மனநிலை நமக்குக் கிடைத்திருப்பதை நாம் மாற்றிக்கொள்ளலாகாது—புள்ளிமான் காட்டுப்பன்றியின் உறுமலைப் பெறாது—எந்நாளும்.

எரிச்சலூட்டும் ஏளனம் பலனற்றது கண்டவர்கள், இட்டுக்கட்டுவதும், ஒட்டி உருவாக்குவதும், பலன் தருமென்று கருதி, அந்த ‘வித்தை’யையும் செய்து காட்டுகின்றனர்—அதிலும் அவர்கள் காண்பது தோல்வியே.

போராட்டம் வலிவிழந்துவிட்டது பொலிவிழந்துவிட்டது, போற்றுவார் இல்லை, துணை நிற்பார் இல்லை, பிசுபிசுத்துவிட்டது மதமதத்துவிட்டது என்றெல்லாம் பேசிப் பார்க்கின்றனர்.

இந்தியை எதிர்த்து இத்தனை வீராவேசமாகப் பேசுகிறார்களே இந்த வாய்ச்சொல் வீரர்கள்! கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு களம் புகாமல், கவாத்து பழகுவதும், அணிவகுப்பு நடாத்துவதும், கருத்தறிவதும் என்ற முறையில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்களே, கவைக்குதவாதார்! கண்டீரே! காளையர்காள்! கடுங்கோபம் எழவில்லையோ உமக்கு! வழி காட்டத் தெரியாதவர்களை நம்பி நாசமாகிறீர்களே! போர்! போர்! என்று முழக்கமிடுங்கள்; புறப்படு! புறப்படு! என்று எக்காளமிடுங்கள்! புறப்படாவிட்டால், வெளியேறுங்கள்! வீரர்கள் நிரம்ப உள்ள கோட்டம் வாருங்கள்! என்றெல்லாம் வீரம் பேசினவர்களை நாடு பார்த்தது; நாம் போரிடமாட்டோம், நமக்கு இல்லை அதற்கான நாடி முறுக்கு என்று சிலராவது நம்புவார்களா என்று மோப்பம் பிடித்துக் கிடந்தவர்களையும் நாம் அறிவோம்! இன்றோ நாம் போரில் ஈடுபட்டிருத்கிறோம் இந்தி ஆதிக்கத்தால் ஏற்படும் பொல்லாங்கினை எதிர்த்து; துந்துபி-