பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

முழக்கினோர், கொம்பு ஊதினோர், என்ன செய்கின்றனர்? எதற்காக இந்தப் போராட்டம்—தேவை இல்லை—பொருள் இல்லை—என்று பேசுகின்றனர்!! நாடு நகைத்திடாதிருக்க முடியுமா? நாட்டிலுள்ளோரில் சிலருக்கேனும் தோன்றாதா, “வீரப்பா! வீரப்பா! வெட்டிப் பேச்சு ஏனப்பா! இந்தி எதிர்ப்பு பொது அப்பா! சந்து நின்று நீ சொன்னதப்பா!! கொளுத்துகிறார் கழகத்தார்! இந்தி ஆதிக்கத்தைக் கொளுத்தி வீரம் நிலைநாட்டப்பா! தூற்றித் திரிவது போதுமப்பா, தொடுத்திடப்பா இந்தி எதிர்ப்புப் போர்!!” என்று கேட்க. ஆனால் யாரும் கேட்கவில்லை — ஏனென்கிறாயோ தம்பி கேட்பதே நேரக்கேடு என்று கருதுகிறார்கள்! அறப்போரில் ஈடுபடுகிறார்கள் ஆர்வமிக்கோர்; நிலைமை காரணமாக அறப்போரில் ஈடுபட இயலாதவர்கள் ஆதரவு தருகின்றனர்; சிறைசென்று திரும்பிடும் செம்மல்களை வாழ்த்தி வரவேற்கிறார்கள்; கழுத்தை நெரித்துக் கொன்று போடும் துணிவு இந்த நெஞ்சத்துக்கும், வலிவு இந்தக் கரங்களுக்கும் உண்டு என்று முழக்கமிட்டவர்கள் இந்தி ஆதிக்கம் புகுத்திடுவோரின் காற்சிலம்பின் ஓசைப்பற்றிப் பாடுகின்றனர், ஒய்யாரம் பற்றிப்பேசுகின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகம் அமைதியான அரசியலில் ஈடுபட்டிருக்கும்போது, வீரதீரம் அற்றது இந்தக் கழகம், வெட்டிப் பேச்சுப் பேசிக்கொண்டிருக்கிறது என்று கூறுவதும், காலமறிந்து கடமை உணர்ந்து, கஷ்ட நஷ்டம் ஏற்கும் துணிவுடன் கிளர்ச்சி நடாத்திடக் கிளம்பிடும்போது, எதற்கு வீண் ஆரவாரம்! எதற்கு இந்த அமளி! போராட்டத்திற்குப் பொருள் இல்லை! என்று பேசுவதும், மயக்க மொழி கேட்டு மெய்யென நம்பிக் கொள்பவர்களிடம் சென்று கழகத்தின் கொள்கை, செயல்முறை, கிளர்ச்சி ஆகியவைபற்றி ஐயப்பாடுகளை மூட்டிவிடுவதுமான காரியத்தைத் தமது ‘அபாரமான’ திறமையைத் துணைகொண்டு அமைச்சர்கள் செய்து பார்க்கிறார்கள்.

போர் என்கிறார்களே, எங்கே நடக்கிறது, போர்!

வெற்றி என்கிறார்களே, எங்கே தெரிகிறது அந்த வெற்றி! எல்லாம் பொய்யுரை! கற்பனை! மனப்பிராந்தி—என்று பேசிப் பார்க்கின்றனர்.