தாமரை குவிந்து தானே இருக்கும். உதயசூரியன் ஒளிபட்ட உடன்தானே, தாமரை மலரும். தாமரை மலர்ந்திருக்கிறது என்று மன்றத்தான் சொன்னது பொய்யுரை அல்ல. காலையில், தாமரை மலரும், அதைக்கண்டு சொன்னான்! நீயோ, இரவு வந்து காண்கிறாய், மூட்டிவிடுவோன் பேச்சினைக் கேட்டுக் கொண்டு. காலையிலே வந்து பார், மலர்ந்த தாமரை காண்பாய்—தாமரை இதழ் விரித்திடக் காலைக் கதிரவன் ஒளிவேண்டும்—அஃது இல்லாத போது, தாமரை குவிந்து தான் காணப்படும். குவிந்து ஏற்ப, காணப்படுவது, காலததின் தன்மைக்கு தாமரை விளங்கும் என்ற உண்மையைக் காட்டுவதாகும். இரவுக் காலத்தில் குவிந்த நிலையில் உள்ளதால், தாமரை, மலருவது இல்லை, இதழ்விரிப்பது இல்லை, என்றா முடிவுகட்டுவது!! மன்றத்தான் சொன்னது பொய்யல்ல. உதயசூரியன் ஒளிபட்டதும் தாமரை இதழ்விரிக்கும். காலம் வரவேண்டும்! காரிருளில் விரிந்த தாமரை தேடாதே, கலகப் பேச்சுக் கேட்டு மனம் மருளாதே!!—என்றான். மூட்டி விடுவோன் சென்றுவிட்டான்.
காலை மலர்ந்தது. கமலமும் மலர்ந்தது. கேட்டு மருள்வோன் அதனைக் கண்டான்—கண்டதால் தெளிவு பெற்றான்.
கமலம் மட்டுமல்ல, கருத்தும் அப்படித்தான்.
உரிய காலம் வரும்போது மலரும். சில காலத்தில் குவிந்த தாமரை போலிருக்கும், உணர்ந்து கொள், என்றான் தெளிவளிப்போன்.
அதுபோலத் தம்பி! கழகம் காலமறிந்து காரிய மாற்றுகிறது. அத்தகைய சீரிய முறைப்படி வகுக்கப்பட்டு, செயல் படுத்தப்பட்டு வருவதே, இந்தி எதிர்ப்பு அறப்போர். காலமும் முறையும் அறிந்து, மாற்றார் மூட்டி விடுவதற்கு இரையாகாமல், கழகம் எனும் அமைப்புக்கும் ஊறுநேரிடாமல் பாதுகாத்தபடி நடத்தப்பட்டு வருகிறது இந்தி எதிர்ப்பு அறப்போர். மூட்டிவிடுவோன் காட்டிடும் வழி நடந்தால், கழகம் படுகுழியில் வீழ்ந்துபடும்; வீழ்ந்துபட்டதும், சேற்றுக் குழியில் வீழ்ந்த யானையைச் செந்நாய்க் கூட்டம் கடித்துத் தின்பதுபோல, கழகத் தோழர்களை,