14
காட்டிக் கொடுப்போரும் மூட்டிவிடுவோரும் காரச் சரக்கினரும் ஈரமற்ற நெஞ்சினரும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கி இருப்பர், அல்லது தமக்குக் குற்றேவல் புரியும் சிற்றாட்களாக்கிக் கொண்டிருப்பர். இதனை அறிந்ததால் தான் கழகத்தை நடத்திச் செல்வோர், காலத்துக்கு ஏற்றபடி முறையினை மாற்றிக்கொண்டனர்—அது குறித்துக் கடாவினோர், கதைத்தோர், என்னாயினர்!! களம் நிற்கின்னறரோ? இலையே!! கதர் அணிந்துகொண்டு விட்டனர். இவர்கள் தான் நமக்குத் தூபமிட்டவர்கள்.
“விடாதே! தொடுத்திடு போர்! உடைத்திடு தடைச்சட்டத்தை!” என்றெல்லாம். எதற்கு? கழகம் எனும் அமைப்பு அழிந்துபடும் என்ற நினைப்பில். கழகம் அழிந்துபடுவதால் என்ன ஆதாயம்? கழகம் பெற்று இருக்கும் எதிர்க்கட்சி எனும் ஏற்றமிகு பீடத்தில் தாம் அமர்ந்துகொள்ளலாம் என்ற நப்பாசையில். கழகம் மேற்கொண்ட வேலைத் திட்டம் இந்த ஆசையில் மண் விழச் செய்துவிடவே, மூட்டிவிடுவோர் இனி எதிர்க்கட்சி என்ற ஏற்றம் பெறமுடியாது என்று உணர்ந்து ஆளுங்கட்சியின் ஒளியைப் பெற்றுக்கொள்ளச் சென்றுவிட்டனர். முன்பு கொண்டிருந்த எண்ணங்கள், வெளியிட்ட ஆசைகள், கண்ட இன்பக்கனவுகள் யாவும் பொய்யாய், கற்பனையாய், கனவாய்ப் புகைந்தே போய்விடக் காண்கிறோம். கழகமோ புயலுக்குத் தப்பிட வளைந்திடும் நாணல்போல, நிலைமைக்கேற்ற முறை வகுத்துக் கொண்டு, நிலைத்து நிற்கிறது.
எனவே, தம்பி! நாம் நடத்தி வரும் இந்தி எதிர்ப்பு அறப்போர் குறித்து அமைச்சர்களும் அவர்களின் அணைப்பிலே அகமகிழ்ச்சி பெறுவோரும் எதைக் கூறிக்கொண்டிருப்பினும் நாம் பொருட்படுத்தத் தேவையில்லை—நாம் மேற்கொண்டுள்ள காரியத்தில் நமக்கு அழுத்தமான, தூய்மைமிக்க நம்பிக்கை இருந்தால். அந்த நம்பிக்கை இருப்பதனால்தான், நாடு மெச்சிடும் விதமான அறப்போரினைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறோம்.