15
மொழிப்பிரச்சினை அவருக்கு அவ்வளவு சாமான்யமானதாக, உப்புச்சப்பு அற்றதாகத் தோன்றுமானால், நாட்டு மக்களிடையே மனக்கொதிப்பையும் கசப்பையும் மூட்டிவிடும் மொழிப் பிரச்சினைபற்றி ஏன் வீணாகப் பிடிவாதம் காட்டுகிறீர்கள்—ஆங்கிலந்தான் இருந்து விட்டுப் போகட்டுமே—தமிழைத்தான் ஆட்சிமொழி ஆக்குங்களேன் என்று, இந்தி ஆதிக்கத்தைப் புகுத்துவதில் முனைந்து நிற்கும் லால்பகதூர்களிடம் எடுத்துச் சொல்லுவதுதானே! சொல்லிப் பார்க்கட்டும்—அப்போது தெரியும் காமராஜர் கண்காட்டும் வழியிலே காங்கிரஸ் செல்கிறது என்ற பேச்சு எத்தகைய இனிப்புப் பூச்சுள்ளது என்பது.
காமராஜர் கருதுவதுபோல, இப்போது எல்லோரும் கூடி ஒன்றுபட்டு நின்று கவனம் செலுத்தித் தீர்த்து வைக்கவேண்டிய பிரச்சினை, சோற்றுப் பிராச்சினை தான் என்றால், லால்பகதூர் இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதிலே இத்தனை தீவிரமும் பிடிவாதமும் காட்டுவானேன்?
இந்தி முக்கியமான பிரச்சினை அல்ல என்று காமராஜரும்,
இந்தி இரண்டு தலைமுறை கழித்துத்தான் வரும் என்று டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரும்,பேசுகிறார்கள்—நம்மை மயக்க—உணர்ச்சியை வேறு பக்கம் திருப்பிவிட! ஆனால், ஒவ்வொரு நாளும் ஒரு புது உத்தரவு கிளம்புகிறது டில்லியிலிருந்து, இந்தியின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும், வேகத்தை அதிகப்படுத்தவும்.