16
இந்திப் பிரச்சினை ஒரு அவசர அவசியப் பிரச்சினை அல்ல என்று பேசுவோரும், இந்தி இரண்டு தலைமுறைக் காலம் வரையில் வராது என்று கூறுவோரும், இந்த இரண்டு வகையில் எந்த வகையினர் என்று கூற இயலவில்லை, தம்பி! ஆனால், எந்த வகையினராக இருப்பினும், நாட்டுக்கு அவர்களின் போக்கு ஆபத்தினையும் கேட்டினையும் மூட்டிவிடுகிறது என்பதிலே அறிவாளர் எவருக்கும் ஐயப்பாடு இருக்க முடியாது.
பொன்னிழந்து விட்டால் வேறு
பொருள் விளைக்கலாகும்; நாளும்
உண்ணும் சோறிழந்தால் வேறு
உணவு தேடலாகும்; மொழிக்
கண்ணிழந்து விட்டால், வாழ்வுக்
காட்சி காண்பதேது? பின்னர்
மண்ணின் வாழ்வெதற்கு? இதனின்
மடிதல் மேலதன்றோ?
இவ்விதம் கேட்கிறார் கவிஞரொருவர்—இலங்கைத் தீவினிலிருந்து.
கவிஞர் தானே! அப்படித்தான் கேட்பார் என்று கூறுவார்களோ ஒருவேளை, சரி, தம்பி! கற்பனைச் செல்வம் தரும் கவிஞரின் பேச்சுடன், வேறொன்றும் காட்டுவோம்.
இவர் அரசியல் தத்துவம் போதிக்கும் பேராசிரியர், பெயர் பி. கே. எஸ். ராஜா. 1963-ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் எட்டாம் நாள், கருத்தரங்கம் ஒன்றில் பேசினார். சோற்றுப் பிரச்சினையா, மொழிப் பிரச்சினையா என்று கேட்கிறாரே காமராஜர், அவர் காணட்டும், பேராசிரியரின் கருத்தினை.