பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

தாய்மொழியான இந்தியை இந்தியாவின் ஒரே ஆட்சி மொழி என்று ஆக்கி எம்மை இழிவுபடுத்தாதீர், இன்னல் விளைவிக்காதீர் இழிமக்களாக்காதீர் என்று கேட்டே போராட்டம் நடத்துகிறோம்.

சாவன் போன்ற உண்மையான காங்கிரஸ்காரரின் வார்த்தைக்கு மதிப்பு தரப்பட்டதா? இல்லை!

ஒரு காங்கிரஸ் தலைவருக்கே ஆங்கிலத்தை இழக்கக் கூடாது என்ற எண்ணம் இந்த அளவுக்கு இருக்கிறதே என்பது பற்றி இந்தி ஆதிக்கக்காரர்கள் துளியாவது அக்கறை காட்டினரா? இல்லை! இல்லை!!

மனத்துக்குள்ளாக—சாவன் ஒரு மராட்டியர்—காங்கிரஸ்காரராக இருந்தபோதிலும், அவருக்கு மராட்டியர் என்ற உணர்ச்சிதான் மேலோங்கி இருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருந்திருப்பார்கள்.

இங்கே சிலர் தான் இந்தியை எதிர்க்கிறார்களே தவிர, ஆயிரக்கணக்கான தென்னாட்டவர் இந்தி படித்துக் கொண்டு வடக்கே வந்திருந்து வாழ்கிறார்கள்—அவர்களுக்கு இந்திமீது வெறுப்பு இல்லை—அவர்கள் இந்தியை எதிர்ப்பதில்லை என்றுகூறி, இந்த நிலையை இந்திக்கு நிரம்ப ஆதரவு இருப்பதற்கு அடையாளம்— சான்று என்று பேசுவோர் உளர். இந்த வாதம் எத்தனை சொத்தையானது என்பதனை எடுத்துக்காட்டி உடைத்தெறிந்திருக்கிறார் ஒருவர்—அவரும் காங்கிரஸ்காரர்-மராட்டியப் பகுதியினர் சங்கர்ராவ் தேவ் என்பார்.

தெற்கே இருந்து வடக்கே மக்கள் வருகிறார்கள்—இந்தி மொழிமீது உள்ள ஆசை காரணமாகவும் அல்ல, அந்த இந்தி மொழி மூலம் பெறக்கூடிய கலாச்சாரத்திற்காகவும் அல்ல; அவர்கள் வருவது பிழைப்புத்தேடி.

சோற்றுக்காக வருகிறார்கள்! சோற்றுக்காகத் தான் மக்கள் சச்சரவிட்டுக்கொள்கிறார்கள்.

இன்று இந்தியை மக்கள் மதிக்கவேண்டி வருகிறது என்றால், அது மற்ற மொழிகளை விட மேலானது என்பதற்காக அல்ல, இந்தி படித்தால் பிழைக்க வேலை கிடைக்கும் என்பதால்தான்.