21
இவ்வளவு வெளிப்படையாகப் பேசியவரும், காங்கிரஸ் கட்சியினர் தான். கொலுவிருக்கக் காங்கிரஸ் கிளம்பியபொழுது இடம் தேடிக்கொண்டவர் அல்ல—சுயராஜ்யக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, சண்ட மாருதம்போல் சுற்றிப் பிரசாரம் செய்து சிறைக் கோட்டமும் சென்றவர்—ஆந்திர நாட்டு மாதர் திலகம்—துர்க்காபாய் அம்மையார்.
குறுகிய மனப்பான்மை கொண்டவருமல்ல—மராட்டியத்துத் தேஷ்முக்கைக் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்.
அந்த அம்மையாரின் எச்சரிக்கையையாவது, இந்தி ஆதிக்கக்காரர்கள் பொருட்படுத்தினாரா? இல்லை!
கடந்த மூன்று வாரத்து நடவடிக்கைகளாலும், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த என் நண்பர்கள் மேற்கொள்ளும் போக்கினாலும் என் உள்ளத்தில் மூண்டு வளர்ந்துள்ள பயத்தை, உள்ளது உள்ளபடி நான் எடுத்துக் கூறாவிட்டால், என் மனச்சாட்சிக்கும், ஆண்டவனுக்கும், என் மாபெருந் தலைவர் மகாத்மா காந்திக்கும் உண்மையாக நடந்து கொண்டவனாக மாட்டேன்.
இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்புவரை, அதிகாரவர்க்கம் பிரிட்டிஷாரிடம் இருந்து, லண்டன் நகரத்தில், பெரிய உத்தியோகங்களுக்கான பரிட்சைகள் நடத்தப்பட்டு வந்த நிலையின்போது, எங்களுக்குச் சந்தேகமும் பயமும் மனத்திலே குடிகொண்டன. வெள்ளையனே உத்தியோக மண்டலத்தில் ஆதிக்கம் வகித்து வந்தான் இப்போது உயர் பதவிகளுக்கான பரிட்சை டில்லியில் நடத்தப்படுவதால், இந்தி பேசும் பகுதிகளான உத்தரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் ஆகிய இடத்தவர் உத்தியோக மண்டலத்தில் ஆதிக்கம் பெறப்போகிறார்கள்.
ஏன் உத்தரப்பிரதேசத்து மத்தியப்பிரதேசத்துக் காரர்கள் இவ்வளவு சகிப்புத்தன்மை அற்றவர்களாக இருக்கின்றார்கள்?