22
இவ்விதம் ‘அச்சம் தயை தாட்சணியமின்றிக்’ கேட்டவர் ஒரிசாவைச் சார்ந்த தாஸ் என்பவர்—புகழ்மிக்க காங்கிரஸ் தலைவர். அவருடைய பேச்சுக்கு ஏதேனும் பலன் கிடைத்ததா ? இந்தி, ஆதிக்கக்காரர்கள் தமது போக்கை மாற்றிக் கொள்ள ஒருப்பட்டனரா? இல்லை! இல்லை! அவருடைய வார்த்தையையும் துச்சமென்று தள்ளிவிட்டு, இந்திதான் ஆட்சிமொழி என்று அரசியல் சட்டத்தில் எழுதிவிட்டனர்.
தாஸ், சங்கர்ராவ், துர்க்காபாய் போலக் காரசாரமாக, ஒளிவு மறைவின்றிப் பேசினால், இந்தி ஆதிக்கக்காரர் கோபம் கொண்டு தமது போக்கை மாற்றிக் கொள்ள மறுப்பார்கள்—இதமாக—விநயமாக-கனிவாக நேசப்பான்மையுடன்—அடக்க ஒடுக்கமாக—நல்ல வாதத்திறமையுடன் பேசினால், அவர்களின் போக்கு மாறிடக் கூடும் என்ற எண்ணம்போலும். இன்று பாராளுமன்றத் துணைத்தலைவராக உள்ள S. V. கிருஷ்ணமூர்த்திராவ் அவர்களுக்கு; அவர் மிகக் கனிவாகப் பேசினார்.
ஐயா! நான் இந்தியைக் கற்றுக்கொள்ள முயற்சி எடுத்துக்கொண்டேன். என் சொந்த மொழியான கன்னடத்தில், சில இந்திப் புத்தகங்களைக்கூட மொழி பெயர்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு இந்திமொழி மிகக் கடினமானதாக இருக்கிறது அதனால்தான் இந்தச் சபையில் இந்தியில் பேசும் துணிவு வரவில்லை.
இந்தி பேசும் மக்களுடைய மொழியை, அதன் இலக்கண இலக்கியக் கட்டுக்கோப்புடன் எங்களால் படித்துக்கொள்ள முடியவில்லை. காலம் பிடிக்கிறது.