பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

நான் ஒரு அறைகூவல் விடுக்கிறேன். இங்குள்ள கோவிந்ததாஸ் அவர்களோ, தாண்டன் அவர்களோ, தமிழர்கள் மத்தியில் போய் இருந்துகொண்டு தமிழ் பேசக் கற்றுக்கொள்ளட்டும். அதற்கு அவர்களுக்கு எவ்வளவு காலம் பிடிக்கிறதோ, அவ்வளவு காலம் தேவை, தென்னகத்தில் இந்தியைப் புகுத்துவதற்கு.

இவ்வளவு சாந்தத்துடன், சமரசநோக்குடன் பேசினாரே கன்னடக் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணமூர்த்திராவ், இதையாவது, பாவம்! நம்முடைய கட்சிக்காரர்! இந்தி கற்றுக்கொள்வதிலே உள்ள கஷ்டத்தை அனுபவித்துக் கூறுகிறார். அவர் கூறிடும் வாதம் நியாயமாகத்தான் இருக்கிறது; நாம் இந்தியைத் தென்னகத்துக்கும் சேர்த்து ஆட்சிமொழி என்று ஆக்குவது அநீதியாகத்தான் இருக்கும் என்ற உணர்வும் தெளிவும் பெற்றனரா, இந்தி ஆதிக்கக்காரர்கள். அவர்களா! அவர்கள் தான், யார் எதிர்த்தாலும், எதிர்ப்புகளை முறியடித்துவிட்டு இந்தி ஏகாதிபத்தியத்தை நிலை நாட்டியாக வேண்டும் என்று துணிந்துவிட்டவர்களாயிற்றே! கேட்பார்களா கிருஷ்ண மூர்த்திராவ் அவர்களின் பேச்சை! கேட்கவில்லை!

தம்பி! இந்தி ஆதிக்கத்தைக் கண்டித்து அறிவுரை, தெளிவுரை, கனிவுரை, எச்சரிக்கை தந்தவர்களின் பட்டியல் மிகமிகப் பெரிது; சிலவற்றை மட்டுமே எடுத்தளித்திருக்கிறேன்.

இந்தியை ஆட்மொழி ஆக்கவேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் முனைந்தபோதே அறிவாளர் பலர் இது போலக் கண்டித்தனர், முயற்சியைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர், முடியவில்லை.

அதற்குப் பிறகும் தொடர்ந்து பேரறிவாளர் பலர், இந்தி ஆட்சி மொழியாக்கப்படுவதைக் கண்டித்த வண்ணம் உள்ளனர்.

நானறிந்த வரையில் எந்த ஜனநாயக நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்கு இத்தனை பரவலான முறையிலும் தொடர்ந்தும் கண்டனமும் எதிர்ப்பும் இருந்து அத்தனையும், வேண்டுகோள், முறையீடு, வாதம், விளக்கம், கண்டனம் எனும் எந்த வடிவினதாயினும் அலட்சியப்படுத்திவிட்டு ஒரு சர்க்கார் தன் போக்கிலே பிடிவாதமாக இதுபோல் இருந்ததில்லை.