36
போர் முடிந்தபிறகு மன மாறுதல் ஏற்படுவது போலவே, தனிப்பட்ட முறையிலே எழும் பகை காரணமாக ஒருவன், தீயசெயலைச் செய்துவிட்ட பிறகு, அவன் உள்ளத்திலே பகை உணர்ச்சி மடியத் தொடங்கும்போது, அவனுக்கே, தன்னுடைய செயலைக்குறித்து, ஒரு அருவருப்பும் அச்சமும் எழுகிறது.
பொதுவாகப் பார்க்கும்போது, கொடுமை செய்வதில், இயற்கையான களிப்பும், பெருமிதமும் கொண்டிடும் காட்டுக்குணம், இன்று பெருமளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கிறது என்று கூறலாம். காட்டுக்குணம் என்று கூறும்போது, அதிலேயும் இருவகை இருப்பதை உணரலாம்: ஒன்று, பாய்ந்து தாக்கும் கொடுமை; மற்றது, பதுங்கி மாய்க்கும் கயமை!
இன்று, இரண்டாவது வகைக் காட்டுக் குணமே, அதிகமாகக் காணப்படுகிறது. காரணம், தாக்கும் வலிவு குறைந்திருக்கிறது என்பதுடன், தாக்குதலை வெறுப்பார்கள், எதிர்ப்பார்கள், தடுப்பார்கள் என்ற அச்சம் மேலிட்டுவிட்டிருக்கிறது; எனவேதான், பதுங்கிடவும், தாக்கிய பிறகு ஒளிந்திடவும், கேட்கும்போது மறுத்திடவும், பிடிபடும்போது தப்பித்துக் கொள்ளவும் கொடுமை செய்தவன், இந்நாட்களில் முயலுகிறான்.
இந்தப் போக்கு ஏற்படச் சமுதாய அமைப்பும், அதன் விளைவாக ஏற்பட்ட சட்டமும், அந்தச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்திடும் திறத்துடன் ஒரு அரசும் காரணமாயின.
எனவே, சட்டம், மனிதனுடைய மனத்திலேயும் போக்கிலேயும், குறிப்பிடத்தக்க ஒரு மாறுதலை ஏற்படுத்தத் துணைபுரிந்திருக்கிறது; கொல்லும் புலிக்குக் கூண்டாக இருப்பது மட்டுமன்றி, புலியின் இரத்த வெறிப்போக்கை ஓரளவு மாற்றியும் இருக்கிறது என்று கூறலாம்.
தனிப்பட்டவர்களுக்குள் ஏற்பட்டுவிடும் பகையானாலும், இரு நாடுகளுக்குள் மூண்டுவிடும் பகையானாலும், பகைகொண்ட அந்த இரு தரப்பினரின் வலிவுக்கு ஏற்றபடி, வெற்றி தோல்வி அமைகிறது.
சட்டத்திற்கு உட்பட்ட ஒரு சமுதாயத்தில், ஒருவன், வேறு ஒருவனைக் கொடுமை செய்யும்போது,