37
கொடுமைக்கு ஆளானவன் பக்கம் சமுதாயம் முழுவதும் துணை நிற்கிறது என்று பொருள்படும்.
கொடுமை செய்தவன், தனியாக்கப்பட்டு விடுகிறான்!
கொடுமைக்கு ஆளானவன் சார்பாகச் சமுதாயம் எழுகிறது; சட்டம் முழக்கம் எழுப்புகிறது; அரசு துணை நிற்கிறது.
கொடுமை செய்தவன் வலிவுமிக்கவனாக இருக்கலாம்; கொடுமைக்கு ஆளானவன், வலிவற்றவனாக இருக்கலாம். அந்த இருவருக்குள் மூண்டுவிட்ட பகையில், சமுதாயம் சட்டத்தின் துணையுடன், தலையிடாதிருக்குமானால், வலிவற்றவனை வலிவுள்ளவன் வதைத்திடுவான், வலிவற்றவன் அழிக்கப்பட்டுப் போய்விடுவான். ஆனால் சட்டத்திற்குத் தன்னைத்தானே உட்படுத்திக் கொண்ட சமுதாய அமைப்புமுறை இருக்கிற காரணத்தால், அந்த வலிவற்றவனுக்குத் துணையாகச் சமுதாயமே நிற்கிறது; ஒருவன் எத்துணை வலிவுமிக்கவனாக இருப்பினும், அவனுடைய வலிவு, சமுதாயத்தின் கூட்டுவலிவின் முன்பு எம்மாத்திரம்? எனவே, அவன், தன் வலிவினைக் காட்டிட இயலாது! அவன் செய்த கொடுமைக்கேற்ற தண்டனை தரப்படுகிறது; கொடுமை செய்தவன், தன் சொந்த வலிவினைக்காட்டித் தப்பித்துக்கொள்ள முடியாது போகிறது.
எனவே, சட்டம், வலியோர் சிலர் எளியோர் தமை வதை புரியும் கொடுமையைத் தடுத்திடும் வலிவுமிக்க ஓர் ஏற்பாடாக விளங்கி வருகிறது.
இவ்வளவும், இதற்கு மேலும் கூறலாம், சட்டத்தின் பொருள், பொறுப்பு, பொருத்தம் ஆகியவைபற்றி!
இவைகளை உள்ளடக்கித்தான், சட்டம் ஆள்கிறது என்று கூறுகிறார்கள். சட்டம், தனிப்பட்ட எவரையும் விட வலிவுமிக்கது, எவர் சார்பிலும் நின்றுவிடாமல், வலியோர் எளியோரை வதைக்காதபடி பார்த்துக் கொள்கிறது என்று கூறுகிறார்கள்.
சட்டத்துக்கு அடங்கி நடப்பது—கேவலப்போக்கு என்றோ, கோழைத்தனம் என்றோ கூறுபவர் எவரும் இரார்; ஏனெனில், சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு.