பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

எனவே, அந்தச் சமுதாயத்திலே உள்ள ஒவ்வொரு தனி மனிதருக்கும் தன்னுடைய இசைவின் பேரில் அமைந்துள்ள ஏற்பாடே சட்டம் என்று கூறிக்கொள்ள, பெருமைப்பட, உரிமை இருக்கிறது சட்டத்திற்கு உட்பட்டு நடப்பது என்பது, தானும் சேர்ந்து சமைத்துக்கொண்டுள்ள ஒரு சமுதாய ஏற்பாட்டுக்கு, சமுதாய நலனைக் கருதி, உடன்பட்டு ஒழுகி வருவது என்ற பொருள் தருவதால், அது தவறு ஆகாது என்பது மட்டுமல்லாமல், அது தலையாய கடமை என்ற எண்ணம் எழுகிறது.

சட்டம் அவ்விதம்; நாம் என்ன செய்யலாம்?

சட்டத்திற்கு மாறாக நான் ஏதும் செய்வதற்கு இல்லை

என்று கூறிடுவோர், ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் அல்லது ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையில், தமது விருப்பு வெறுப்பு எப்படி இருப்பினும், அந்த விருப்புவெறுப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டேனும், சமுதாய ஏற்பாட்டுக்கு ஒத்தபடிதான் நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தான் தெரிவிக்கிறார்கள்.

நாம் என்ன செய்யலாம்? சட்டம் அப்படி!
இப்படியும் ஒரு சட்டமா?
இதற்கும் சட்டம் வந்துவிட்டது!
எடுத்ததற்கெல்லாம் சட்டமா?

சட்டம் என்றாலும் அதிலே பொருத்தம், பொருள் இருக்க வேண்டாமா?

ஆர அமர யோசிச்சிச் சட்டம் போடணும்.
இவருடைய சட்டமப்பா இது!
எத்தனையோ சட்டத்திலே இது ஒன்று.
ஏன், போட்டுவிடேன் சட்டம் இதற்கும்?
சட்டம் போடுவதா பெரிய கஷ்டம்?
அவருக்கென்ன, நினைத்தா போடுவாரு ஒரு சட்டம்!
சட்டம் வருகிறதாம்பா! தெரிந்துகொள்!
சட்டம் போடப்போறாராமே பெரிய சட்ட நிபுணரு!
சட்டம் போட இவனுக்கு என்ன தகுதி இருக்குது?