பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

துக்குத் துணையாக, அநீதியைக் கொலுவேற்ற இயற்றப்படுமானால், சட்டம் மதிப்பற்றுப்போகும், துச்சமென்று எண்ணுவர், எதிர்த்திட முனைவர்—எதிர்த்துள்ளனர்— எதிர்த்து நிற்பர்.

சட்டம் நோய் தீர்க்கும் மருந்து என்று கொள்வோமானால், அம்மருந்து முறைப்படி செய்யப்பட்டதாக, அத்துறை வல்லுநரின் ஒப்பம் பெற்றதாக, நோய்தீர்க்க வல்லதாக அமைந்திருக்கவேண்டும். அங்கனம் தயாரிக்கப் பட்டதாக இருப்பின் கசப்பு, குமட்டல், எரிச்சல் ஏற்படினும் சகித்துக்கொண்டு, நோய்போக அம்மருந்து உட்கொள்வர். பொருள்வகை, செய்முறை அறியாது, கண்மூடித்தனமாக, விளக்கமற்ற நிலையில் விரைவு அதிகம்காட்டி, தயாரித்த மருந்து எனின் அதனை உட்கொள்ளார்—உட்கொள்பவர்க்கு நோயினும் கேடான நிலையே ஏற்பட்டுவிடும்.

சட்டத்தை மீறலாம் என்ற நினைப்பும், மீறவேண்டும் என்ற துடிப்பும், மீறத்தக்க துணிவும் மக்கள்—அல்லது குறிப்பிடத்தக்க பகுதியினர் கொள்ளத்தக்க விதமான கோணற் சட்டத்தை இயற்றிவிட்டு, சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு, அதனை மீறலாகாது என்று பேசிப் பயன் இல்லை.

அவ்விதம் செய்யப்பட்ட சட்டங்கள் நிலைத்திருப்பது மில்லை.

எனவேதான், சமூகத்தில், விவரம் அறியாமல், விளக்கம் பெறாமல், ஆர அமர யோசியாமல், தீது பயக்கத்தக்க, தன்மானம் அழிக்கத்தக்க, உரிமையை உருக்குலையச்செய்யத்தக்க, வலியோர்க்குத்துணை நிற்கத்தக்க விதமான சட்டங்களை எதிர்த்து நிற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன — நடைபெற்றுக் கொண்டு வருகின்றன; நடைபெற்றுத்தீரும்.

சட்டம் இயற்றுவது என்பது எத்தனை பொறுப்பான காரியம் என்பதை உணர்ந்து, தூய நோக்கத்துடன் இயற்றிட வேண்டும்.

சட்டம் இயற்றும் அதிகாரம் எம்மிடம் சிக்கிவிட்டது, இனி எமது விருப்பத்தின்படி சட்டங்களை இயற்றுவோம் என்ற போக்கு அறவே கூடாது. அதனைச் சமூகம் தாங்கிக்கொள்ளாது.