42
தேவை அறிந்து, சூழ்நிலை தெரிந்து, அனுபவ அறிவையும் அறிவாளர் கருத்தையும் பெற்று, மக்களுக்குப் பெரும்பாதகம் விளைவிக்காத விதமான முறை கண்டறிந்து, சட்டங்கள் இயற்றப்படவேண்டும்; அத்தகைய சட்டங்களை மதித்து நடப்பர்—நடந்து கொள்கின்றனர்.
கனி தரும் மரமாகத்தக்க செடி, தோட்டத்தில் பயிரிடுபவர்களே, அந்தச்செடி, வீட்டுச் சுவரின் இடுக்கிலே தன்னாலே முளைத்துவிட்டால், கல்லி எடுக்கிறார்கள். வேரினைக் கருக்கிடவும் செய்கிறார்கள்.
மக்களின் நல்வாழ்வுக்காக இந்தச் சட்டம் பிறந்திருக்கிறது என்ற நம்பிக்கை எழத்தக்க முறையில் சட்டம் இயற்றவேண்டும்—மீறினால் என்ன ஆகுமோ என்ற கிலி மக்கள் மனத்திலே எழும். ஆகவே, அவர்கள் தண்டனைக்குப் பயந்து அடங்கிக்கிடப்பர் என்று மட்டும் எண்ணிக்கொண்டு, சட்டத்தை இயற்றிவிடுவது, முழு அளவு பலனை நிச்சயம் தாராது. இதை விளக்கிடும் நிகழ்ச்சிகள் வரலாற்று ஏடுகளிலே நிரம்ப இருக்கின்றன.
சட்டத்தை மீறலாமா என்று கேட்கிறார்களே சிலர், அவர்களுக்குக் கூறிடத்தயங்காதே, தம்பி! தேவையான, நியாயமான சட்டங்களை நாங்கள் மதிக்கிறோம். சட்டத்தின் கட்டுக்கு அடங்கி நடந்து கொள்கிறோம். ஆனால், எம்மை இழி மக்களாக்கிவிடத்தக்க கேடு விளைவிக்கும் சட்டம் இயற்றப்பட்டால், அதனை மதித்திட முடியாது, மீறித்தான் நடப்போம், அதற்காக அளிக்கப்படும் தண்டனையை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வோம் என்பதனை—தெளிவாக—திட்டவட்டமாக என்று.
எல்லாச்சட்டத்திலும் மேலானது, உயிரானது, புனிதமானது, அரசியல் அமைப்புச் சட்டம் என்கிறார்கள்.
அதனைவிட மேலானது, புனிதமானது, நல்வாழ்வுக்கான மக்களின் அடிப்படை உரிமை.
அந்த உரிமையைப் பறித்திடும் சூதுமதியுடன், சூழ்ச்சித்திறத்துடன், ஒரு ஏற்பாடு செய்துகொண்டு, அதற்குச் சட்டத்தைக் கருவியாக்கிக் கொண்டால், அந்தச் சட்டத்தை எப்படி மதித்திட முடியும், எவர் மதிப்பர், ஏன் மதித்திடவேண்டும்.