43
இந்த எண்ணத்துடனேயே, இந்த எண்ணம் தரும் தெளிவையும் துணிவையும் துணைகொண்டே, இந்தி எதிர்ப்பு அறப்போர் நடாத்தப்பட்டு வருகிறது. இது சட்டத்தை மீறுவதாகும் என்கிறார்கள் துரைத்தனத்தில் இடம்பிடித்துக் கொண்டவர்கள்; அல்ல! அல்ல! எத்தகைய தீதான, தேவையற்ற, சட்டத்தை இந்தத்துரைத்தனம் எம்மைச் சுமக்கச் சொல்கிறது பாருங்கள் என்று உலகோர்க்கு உணர்த்த நடத்தப்படும் அறப்போர் இது என்கிறோம், நாம்.
தம்பி! சட்டம் பொருத்தம் பொருள் அற்றதாகவும், உரிமைக்குக்கேடு விளைவிப்பதாகவும் இருந்திடும்போது, மக்கள் சட்டம்பற்றி என்னென்ன பேசிக் கொள்வார்கள் என்பது குறித்து நான் குறிப்பிட்டுள்ள பகுதியை மறுபடியும் ஒருமுறை படித்துப்பார். ஒவ்வொரு பேச்சும் ஒரு மனநிலையைக் காட்டிடும்.
நாம் என்ன செய்யலாம். சட்டம் அப்படி!—என்ற பேச்சிலே, ஒரு ஏக்கம் தொனிக்கிறதல்லவா? இந்த ஏற்பாடு கெடுதல் மூட்டுகிறது, தெரிகிறது; ஆனாலும், சட்டம் இதுபோலச் செய்துவிட்டார்களே, என்ன செய்வது என்ற ஏக்கம்
இப்படியும் ஒரு சட்டமா? கோபமும் வெறுப்பும் கலந்திருக்கிறது, இந்தக் கேள்வியில்.
இதற்கும் சட்டம் வந்துவிட்டதா? என்று கேட்கும் போதும் எடுத்ததற்கெல்லாம் சட்டமா? என்று வினவிடும் போதும், ஒரு துரைத்தனம் கண்டதற்கெல்லாம் சட்டம் போட்டு, மக்களை அதிக அளவுக்குக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது, அந்தத் துரைத்தனத்துக்கு ‘அமுல்’ செய்வதிலேயே அளவற்ற சுவை இருக்கிறது என்ற கருத்து கலந்து வெளிவருகிறது.
பொருளும் பொருத்தமும் அற்ற முறையிலே சட்டம் இயற்றும்போது, மக்கள் வெறுப்படைந்து பேசுகிறார்கள், சட்டம் என்றால் அதிலே பொருத்தம் பொருள் இருக்க வேண்டாமா என்று.
ஆர அமர யோசித்துச் சட்டம் போடவேண்டும் என்ற பேச்சு எப்போது எழுகிறது! ஒரு பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்து எடுத்துரைத்துச் சட்டம் இயற்ற,