பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையக்கூடும் என்பதாக.

காங்கிரசை எதிர்த்து நிற்கும் வேறு எந்தக் கட்சியையும் பற்றி இந்தப் பேச்சு எழவில்லை, தி. மு. கழகம் பற்றியே இந்தப் பேச்சு, பரவலாக எழுந்திருக்கிறது.

இது எதிர்க்கட்சி மட்டுமல்ல, ஆளுங் கட்சியாக வரக்கூடிய வகையில் வளரும் கட்சி என்ற எண்ணம் காங்கிரஸ் பெருந்தலைவர்களுக்கே ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அந்த எண்ணம் காரணமாகவே, மனக்குமட்டல் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அந்த குமட்டலின் காரணமாகவே,

பைத்தியக்காரர்கள்.
பகற் கனவு காண்பவர்கள்.

என்று ஏசிப் பேசியிருக்கிறார் அகில இந்திய காங்கிரசின் தலைவர்.

தம்பி! அடுத்த பொதுத் தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்பதும், எத்தகைய ஆட்சி அமைய வேண்டும் என்பதும், பொதுமக்களின் கரத்தில் இருக்கிறது. இந்நாட்டின் மன்னர்கள், நாளை அவர்களின் விருப்பத்தின் படி ஒரு அரசு அமைத்துக் கொள்வார்கள். அந்த உரிமை அவர்களுக்கு.

அதுதான் ஜனநாயகம் எனப்படுவது. இந்நிலையில், தி. மு. கழகம் ஆட்சிக்கு வந்துவிடப் போகிறதாமே என்று மனக் குமட்டல் கொள்வதால் என்ன பலன்? பொதுமக்கள் விரும்பித் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிப் பொறுப்பிலே அமர்த்துவார்களானால், அது எப்படிக் குறையுடையதாகும்? ஆட்சியை யாரிடம் ஒப்படைப்பது என்ற உரிமை படைத்தவர்களல்லவா பொது மக்கள்? மனக்குமட்டல் கொள்வது எதற்கு?

ஒருவர் பேசியிருக்கிறார் எண்ணிப் பத்து நாள் நடக்குமா, கழக ஆட்சி! என்று,

இன்னொருவர் ஒரு படி மேலே சென்று கூறுகிறார். “பத்தே நாளில், கழக ஆட்சியைக் கவிழ்த்துக் காட்டு வோம்” என்று.