பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

பேசுகிறார்களே, அது ஏன்? மனக்குமட்டல் கொள்கிறார்களே சரியா? என்று கேட்டுப் பார்.

நாட்டை ஆள நீயா? உனக்கா அந்த அந்தஸ்து!!

நீ யார்? உன் யோக்யதை என்ன? உன்னிடமா நாடு ஆளும் பொறுப்பை ஒப்புவிப்பார்கள்?

நாடு ஆள்வது சாதாரண காரியமா! திறமை வேண்டாமா? தகுதி வேண்டாமா? உனக்கு ஏது அவை?

இப்படிப் பேசுவர்—பேசுகின்றனர்—சிலர். இவர்கள், நடைபெறுவது ஜனநாயகம் என்பதை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள்.

ஜனநாயகத்தில், நாடாளும் நிலை, பொதுமக்களின் ஆதரவைப் பொறுத்திருக்கிறது, பொதுமக்கள் பார்த்து, ஒரு கட்சியை ஆட்சிப் பொறுப்பிலே இருந்திடச் சொன்னால், அந்த ஆணை ஒன்றே அந்தக்கட்சிக்கு, ஆட்சி நடாத்தும் தகுதி, திறமை, வலிமை யாவற்றையும் தன்னாலே பெற்றுத் தருகிறது!

மோட்டாரில் ஏறிக்கொள்பவன், குடல்தெறிக்க ஓடத்தேவையில்லை—உட்கார்ந்த நிலையிலுள்ள அவனை, மோட்டார் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் வேகமாக அழைத்துச் சென்று சேர்க்கிறது.

பொதுமக்களின் ‘உத்தரவு’ எனும் விசை தான், ஆட்சிப் பொறுப்பில் அமரும் எந்தக் கட்சிக்கும் தகுதி, திறமை, அளிக்கிறது. அந்தப் பொதுமக்களின் உத்தரவு கிடைத்து தி. மு. கழகம் ஆட்சிக்கு வருமானால், தவறு என்ன? என்று விளக்கமாகக் கேட்டுப்பார், தம்பி! நல்ல காங்கிரஸ்காரராக இருந்தால், பொதுமக்கள் பார்த்து கழகத்துக்கு அந்த நிலையை உண்டாக்கினால், அந்தத் தீர்ப்பை ஒத்துக்கொள்ள வேண்டியதுதான் என்று தெரிவிப்பார்,

இந்த “விடுவோமோ?” க்காரர்களைப்பற்றிக் கவலை வேண்டாம்! பொதுமக்களின் ‘ஆணை’க்கு முன்பு எந்த ஆர்ப்பரிப்பும் நில்லாது, நிலைக்காது.

இவ்வளவு தெரிவாக இது தெரியும்போது மனக்குமட்டல் ஏன் ஏற்படுகிறது என்கிறாயா, தம்பி! காரணம் என்ன தெரியுமா? பெரிய நிலைக்குச் சென்று