இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காஞ்சிக் கடிதம்: 17
இதயம் வென்றிட...3
- தருமபுரித் தோல்வி நம்பிக்கை கொண்டோர்க்கு நம்ப முடியாச் சேதி
- மக்களின் பரிவு கழகத்திடம்
- ஆபிரகாம் லிங்கனுடைய தோல்வி—வெற்றிப் பட்டியல்
- அமைச்சர்கள் தருமபுரி தலைநகர் என்றதால், கழகத்துக்குக் கிடைத்த வாக்குக் குறைவு.
தம்பி,
மல்லிகைக் கொடியின் முனை ஒடிந்திருக்கக் காணும் போது எவருக்கும் அடடா! ஒடிந்து விட்டதே! கொடியே இதனாலே கெட்டுப்போய்விடுமோ, காய்ந்து போய் விடுமோ, இனி இந்தக் கொடியிலே அழகிய மலர்கள் பூத்திடாதோ! மணம் பரப்பிடாதோ! என்றெல்லாம் கூறிடத்தோன்றும், கவலை உண்டாகும்.
எருக்கஞ் செடி எருமையின் காலிலே சிக்கிக் கூழாகிப் போயினும், யார் அதைக்கண்டு கவலைகொள்வார்கள்!!
ஊருக்கே எழிலளித்து வரும் மணிமாடத்தின் சுவரிலே ஒரு சிறு வெடிப்பு ஏற்பட்டால் காண்பவரெல்லாம் கவலை கொள்வார்கள்; இந்த வெடிப்பினாலே கட்டடத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் கொள்வதால்; கலனாகிப்போய் கவனிப்பாரற்றுக் கிடக்கும்