பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

பாழுங்கிணற்றிலே மேலும் சிறிது கலன் காணப்பட்டால் கவலைகொள்வார் உண்டோ?

பட்டுச் சட்டையிலே ஒரு பொட்டு மசி வீழ்ந்தாலும், எல்லோர் கண்களிலும் படுகிறது, என்ன இது! என்ன இது! என்று கேட்கிறார்கள்; குடுகுடுப்பாண்டியின் உடையிலே காணப்படும் கறைபற்றிக் கவலைப்படுவார் உண்டோ?

வீரனுடைய கரத்திலே வீழ்ந்துவிட்ட ‘வெட்டு’ எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும்; உடற்கட்டைப்பார், இரும்புபோல! என்று கூறினாலும், வீணனுடைய உடலமைப்பிலே எவரும் கவனம் செலுத்தமாட்டார்கள்.

திருக்குறள் ஏட்டின் பேரிலே மைக்கூடு கை தவறிக் கவிழ்ந்துவிட்டால், பதறிப்போவோம்; பழைய பஞ்சாங்கத்திலே கறையான் குடியேறினால்கூட கவலை கொண்டிடத் தோன்றுமா?

நாம் நல்லது என்று எண்ணி மதிப்பளித்திடும் எந்தப் பொருளுக்கேனும், ஏதோ காரணத்தால் ஏதாகிலும் ஒரு சிறு கெடுதல் ஏற்பட்டுவிட்டாலும், பதறிப்போகிறோம். அது அந்தப் பொருளிடம் நமக்கு இருக்கும் பற்று எந்த அளவு இருக்கிறது என்பதற்குச் சான்று!

தம்பி! மகிழ மரத்தடியிலே உதிர்ந்து கிடக்கும் பூக்களை, ஒவ்வொன்றாகப் பக்குவமாகப் பொறுக்கி எடுத்து மகிழ்ந்திடுவர் சிற்றிடையார்!! தேங்காய் ஓட்டுத் துண்டுகளை அல்ல!!

கழுத்தளவு தண்ணீரில் இறங்கிப் பறிக்கிறான் ஓர் காளை, அழகோவியமாகத் திகழ்ந்திடும் செந்தாமரையை—அவன் காலைச் சுற்றிக்கொள்ளும் பாசியைத் தூக்கி வீசிவிடுகிறான் மற்றோர் பக்கம்.

தத்தமது கருத்துக்கு எவை எவை விரும்பத்தக்கன, மகிழ்ச்சி தரத்தக்கன என்று தோன்றுகின்றனவோ, அந்தப் பொருளினைப் பெற அவர்கள் முனைவதும், அந்த முயற்சியிலே வெற்றி கிடைத்திடும்போது மகிழ்ச்சி கொள்வதும் இயற்கை.

பொழுது சாயும் நேரம், உச்சிப்போது முதல் தேடித் தேடிக் கண்டிட முடியாது கவலை மிகுந்திருந்தவனுக்கு,