125
அவன் தேடிவந்த மூலிகை, ஒருசிறு குன்றின்மீது இருப்பதாகச் ‘சேதி’ கிடைக்கிறது; கிடைத்ததும், இன்றைக்கு இதுபோதும், நாளைய தினம் பார்த்துக் கொள்ளலாம் என்றா இருந்துவிடுவான்? ஒருக்காலும் இல்லை; அலுப்பினை மறந்திடுவான்; அகமகிழ்ச்சியுடன், குன்று நோக்கி நடந்திடுவான்.
தாம் விரும்பும் பொருளைப் பெற்றிடும் முயற்சியில் ஈடுபடுவோருக்கும், இன்னலையே கன்னலாக்கிக் கொள்ளும் இயல்பு ஏற்பட்டுவிடும்.
ஆனால், அத்தனை கஷ்டப்பட்டு அவன் கொண்டு வந்த மூலிகை, கடுங்காற்றொன்று வீசியதால், கரம் விட்டுக் கிளம்பி, காட்டிலே ஓர்புறத்திலே, கள்ளி காளான் மிகுந்த பகுதியிலே பறந்து சென்றுவிட்டால், அவன் எவ்வளவு பதறிப் போவான்!
வெறுங்கையுடன் வீடு திரும்புகிறான்; எடுத்த காரியந்தனை முடித்திடும் ஆற்றல் மிக்கவன் இவன் என்பதால், இல்லத்துள்ளோர், மூலிகை கொண்டு வருகிறான் என்று எண்ணிப் புன்னகை காட்டுகிறார்கள்; பெருமூச்செறிந்த படி அவன், பட்டபாடு வீணாயிற்று! கரத்திலே சிக்கிற்று, கடுங்காற்று பறித்துக் கொண்டது! என்று கூறுகிறான்; கேட்போர் உள்ளம் என்னென்ன எண்ணும்!
தாம் விரும்பும் பொருள், மதித்திடும் பொருள், பெற்றிட வேண்டி, ஆற்றல் மிக்கவனை அதற்காக அனுப்பிவைத்திட, அவன் ஆயிரத்தெட்டு இன்னலைத் தாங்கிக்கொண்டு, பொருளைக் கண்டெடுத்து வருகிற வழியில், அவனையும் மீறியதோர் வலிவினால் பறிக்கப்பட்டுப் போய்விடின், பொருளைப் பெறத் துடித்துக் கொண்டிருப்பவர்களின் மனம் என்ன பாடுபடும்!!
பெற்றிட வேண்டியதாக ஒரு பொருள் இருந்து, அதைப் பெற்றளிக்கும் ஆற்றல் மிக்கவன் அதைப் பெற முனைந்து, பெற்றிடுவான் என்ற நம்பிக்கை பெரும் அளவுக்கு எழுந்திட்ட நிலையில், பெற்றிட இயலவில்லை என்றோ, பெற்றிட முனைந்தேன், வேறொருவன் அதனைத் தட்டிப் பறித்துக்கொண்டு சென்றான் என்றோ அப்பொருளைப் பெற்றளிக்கச் சென்றவன் வந்து கூறிடும்போது, பொருளைப் பெற்று மகிழ்ந்திட எண்ணி ஆவ-