127
- கழக வெற்றி நிச்சயம் என்று மக்கள் எத்துணை நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்கள்,
- வெற்றி பெற்றிடத்தக்க ஆற்றல் கொண்டது கழகம் என்ற எண்ணம் எவ்வளவு அழுத்தமாக இருந்திருக்கிறது,
என்பவைகளை அறிந்துகொள்ள முடிகிறது; கவலையையும் கலைத்துவிட்டு ஓர் இன்பப் புன்னகை எழுகிறது.
- கழகமாவது, வெற்றி பெறுவதாவது!
- கழகத்துக்கு ஏது அந்த வலிவு!
- கழகம் வெற்றி பெற்றால் என்ன, தோற்றால் என்ன!
என்ற இந்த முறையிலே, பற்றற்று, மக்கள் இருந்துவிடவில்லை; உலகிலே கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் எத்தனை எத்தனையோ இருக்கின்றன. இப்போது கழகம் தர்மபுரியில் வெற்றி பெற்றதா இல்லையா என்பதிலா கவனம் செலுத்தவேண்டும்! என்று கூறி அலட்சியய் போக்கிலே இருந்துவிடவில்லை. கழகம் வெற்றி பெறவேண்டும், கழகம் வெற்றி பெறும், அந்தச் சேதி காதில் விழும், களிப்புக் கிடைத்திடும் என்று மக்கள் மிக்க ஆவலுடன் இருந்திருக்கிறார்கள். ஆகவே தான், கழகம் தர்மபுரியில் தோற்றுவிட்டது என்றதும், அவர்கள் திடுக்கிட்டுப் போயினர், துயர் கப்பிக்கொண்டது.
ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கழகம் ஒரு தேர்தலிலே ஈடுபடும்போது, வெற்றி யாருக்கு என்பது பற்றி, மக்கள் இந்த அளவு அக்கறை காட்டினதில்லை.
வெற்றி பெற்றால்கூட, கழகமா? வெற்றியா? சரி, அதனால் என்ன? கழகம் வெற்றிபெற்றுவிட்டதால்! காய் கனியாகிவிடப்போகிறதா, காகம் கானம்பாடப் போகிறதா! ஏனப்பா, கடுகை மலையாக்கிக் காட்டுகிறாய்!! என்று பேசிடுபவரின் தொகைதான் மிகுதி.
இன்று நிலைமை அவ்விதம் இல்லை; கழகம் தேர்தலிலே ஈடுபடுகிறது என்றால், கட்டாயம் வெற்றிதானே! இதிலென்ன அய்யப்பாடு எழமுடியும்!! என்று மக்களில் பெரும் அளவினர் பேசிக்கொளக் கூடிய கட்டம் தோன்றிவிட்டது.