பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

கழகம், மக்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறது; கழகம் வெற்றிபெறத்தக்க ஆற்றலுடன் இருக்கிறது என்ற நம்பிக்கை மக்களிடம் மிகுந்திருக்கிறது; கழகம் வெற்றிபெறவில்லை என்றால், மக்களுக்குத் திகைப்பு ஏற்படுகிறது, எனும் இவை பொருள் மிக்கன. நாம், மக்களின் பார்வையிலே இருக்கிறோம், மக்களின் பரிவு நம்மிடம் உறவுகொண்டிருக்கிறது என்பது பொருள்.

ஆகவேதான் தம்பி! தர்மபுரியில் கழகம் தோற்றுவிட்டது என்ற உடன், மல்லிகைக் கொடியின் முனை ஒடிந்திருப்பதைக் காணும்போது, மணிமாடச் சுவரிலே வெடிப்பு ஏற்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, பட்டுச் சட்டையிலே ஒரு சொட்டு மசி விழுந்திருப்பது காணும் போது, வீரன் கரத்திலே ஒரு வெட்டு வீழ்ந்திருப்பது தெரியும்போது, திருக்குறள் ஏட்டிலே மசிக்கூடு கவிழ்ந்தது காணும்போது, எப்படிப் பதறுவார்களோ, கவலைகொள்வார்களோ. அப்படிக் கவலை கொள்கிறார்கள், கழகத்தின் தோல்வியைக்கேட்டு.

செல்லாத நாணயத்தைத் தந்திரமாக, நல்ல நாணயம் என்று கடைக்காரனை நம்பச்செய்து தந்துவிட்டு, பொருள் பெற்றுக்கொண்டுவந்து விடுபவன் அடையும் மகிழ்ச்சி காங்கிரஸ்காரர்களைப் பிடித்து உலுக்கியபடி இருக்கிறது, இப்போது!!

அதிலும், பலநாட்கள் பட்டினி கிடந்தவனுக்கு ஒரு நாள் விருந்து கிடைத்துவிட்டால், தின்னமுடியாத அளவுக்குத் தின்றுவிட்டுத் திணறுவார்களே, அந்த நிலைக்குச் சென்றுவிட்டார் முதல் அமைச்சர் பக்தவத்சலனார்!

பல நாட்களாக, கொளுத்தினார்கள் இடித்தார்கள், சுட்டார்கள் செத்தார்கள், ஓடினார்கள் துரத்தினார்கள், பிடித்தார்கள் அடைத்தார்கள், என்ற விதமான ‘சுபசேதி’களையே கேட்டுக்கேட்டு, இடிந்து போயிருந்தவரல்லவா, இப்போது வெற்றி என்றதும், தெருக்கூத்திலே காண்போமே, கலர்க்கண்ணாடித்துண்டுகள் பதித்த கிரீடமும், காக்காப் பொன்முலாம் பூசப்பட்ட கட்கமும், ஐந்தாறுவிதமான வர்ணத்துணிகளைச் சுற்றி விடப்பட்ட ஆடை அலங்காரமும், பிசின்போட்டு ஒட்டப்பட்ட மீசை