131
இதனை நாம் மறத்தலாகாது, நினைவினிற் கொள்ள வேண்டும்; எதற்கு? மக்களின் இதயம் நமது பக்கம் என்று அறிந்து அகமகிழ்ந்து நம்பிக்கை கொண்டு விடுவது மட்டும் போதாது; வெற்றிக்கான முறைகளைச் செம்மைப் படுத்திக் கொள்ளவேண்டும் என்ற உணர்ச்சியைப் பெறுவதற்காக.
தேர்தலிலே மட்டுமல்ல, எடுத்த காரியம் எதிலும் தொட்டது அத்தனையும் பலித்துவிடும் என்று நிலைமை இருந்துவிடுவதில்லை. ஏமாற்றங்களும், இடையூறுகளும் எவருடைய பாதையிலும் ஓரோர் வேளை குறுக்கிடத்தான் செய்யும். தோல்விகளையும் சந்தித்திட வேண்டும்; துணிவுடன். ஒரு பட்டியல் தருகிறேன், பார் தம்பி!
- 1831—வியாபாரத்தில் தோல்வி.
- 1832—சட்டசபைத் தேர்தலில் தோல்வி.
- 1833—மீண்டும் வியாபாரத்தில் தோல்வி.
- 1834—சட்டசபையில் பதவி.
- 1835—க தலியின் மரணம்.
- 1836—நரம்புக் கோளாறு நோய்.
- 1838—சட்டசபைத் தலைவர் தேர்தலில் தோல்வி.
- 1840—எலக்டர் தேர்தலில் தோல்வி.
- 1843—பெருமன்றத் தேர்தலில் தோல்வி.
- 1846—பெருமன்றத் தேர்தலில் வெற்றி.
- 1848—பெருமன்றத் தேர்தலில் தோல்வி.
- 1855—செனட் தேர்தலில் தோல்வி.
- 1856—உதவி ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி.
- 1858—செனட தேர்தலில் தோல்வி.
- 1860—ஜனாதிபதி தேர்தலில் வெற்றி.
இந்தத் தோல்வி—வெற்றி பற்றிய பட்டியல் எவருடையது தெரியுமா தம்பி! இறவாப் புகழ் பெற்றுவிட்ட ஆபிரகாம் லிங்கனுடையது!
ஆமாம்! தம்பி! அத்தனை தோல்விகளைக் கண்டிருக்கிறார் ஆபிரகாம்லிங்கன். எத்துணை உள்ள உரம்! அந்தத் தோல்விகளைக் கண்டு மனம் உடைந்திடாமல், முயற்சியிலே மேலும் மும்முரம் காட்டி, அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி இறவாப் புகழ்பெற்றுக் காட்டினார். ஒவ்வொரு முறை அவர் தோற்றபோதும் அந்த நாட்டுப் பக்தவத்சலங்கள் என்னென்ன பேசியிருப்பார்கள் தொலைந்தான்! தொலைத்துவிட்டோம்!! என்று