132
எத்தனைபேர் முழக்கம் எழுப்பியிருப்பர்? ஆபிரகாம் லிங்கனுடைய நண்பர்களேகூட, இந்தத் தோல்விகளைக் கண்டபோது, இவ்வளவு தகுதியுள்ளவரைத் தேர்ந்தெடுக்காத இந்த மக்களை என்ன சொல்வது! இப்படிப்பட்ட மக்களை நம்பி யார் தான் எந்த நல்ல காரியத்தைத் தான் செய்ய முற்பட முடியும்! என்றெல்லாம் பேசியிருந்திருப்பார்கள். ஆயினும், ஆபிரகாம்லிங்கன், இந்தத் தோல்விகளைக் கண்டு, துயர்துளைக்கும் மனத்தினராகிவிடவில்லை, மக்களின் நல்லாதரவு கிடைக்கும் வரையில், அதற்காகப் பாடுபடுவது தமது கடமை என்ற உணர்வுடன் பணியாற்றினார்; திராவிட முன்னேற்றக் கழகம், பொதுமக்களின் நல்லாதரவைக் கேட்டிடும் பணியினை ஓர் கடமை எனக்கொள்ள வேண்டும். மக்கள் தமது நல்லாதரவை நமக்குத் தராமலும் இல்லை. தர்மபுரியில் நமக்கு அந்த நல்லாதரவு கிடைக்காமற் போனதற்கான காரணத்தை, கழகத் தோழர்கள் கண்டறிய வேண்டும்; நமது வேலை முறைகளிலே இருந்திடக்கூடிய குறைபாடுகளைக் களைந்திடுவதிலே கவனம் செலுத்த வேண்டும். நமது தோல்வி, நமக்கு மட்டுமன்றி, நமது கழகத்திற்கு வெளியே உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கெல்லாம், எவ்வளவு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது என்பதை அறியும்போது, கவலையைவிட, ஒரு புதுவித நம்பிக்கையே நமக்குத் தோன்றும். அத்துணை மக்கள் நமது வெற்றியை எதிர்பார்த்தபடி உள்ளனர் என்பது புரிவதால்.
பொது உண்மையை அனைவரும் அறிவர்; ஆளுங்கட்சிக்குக் கிடைக்கக்கூடிய சில வசதிகளும், வாய்ப்புகளும், எதிர்க்கட்சிகளுக்குக் கிடைக்காது. ஆம் எனில் அதற்கு என்ன பரிகாரம்? அந்த வசதிகளையும் வாய்ப்புகளையும் கொண்டு ஆளும்கட்சி சாதித்துக்கொள்வதை நாம் நமது பரிவினைக்காட்டி, தோழமையைக் காட்டி. தூய்மையைக் காட்டி, முயற்சியின் மூலம், பெற்றிட வேண்டும்; பெற்றிட முடியும்; பெற்றிருக்கிறோம்; தரும புரியில் பெறத் தவறிவிட்டோம்.
ஆளுங்கட்சி அதிகார பலத்தைக் காட்டி ஏழை எளியவர்களை மட்டுமல்ல. வணிகர்களை, அலுவலகப் பணியாளர்களை, மயக்கவும், மிரட்டவும் முடிகிறது. அதனால்தான், அமைச்சர்களாக இருந்துகொண்டே