பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

கல்லூரி விஷயமாகக் கேட்டால், அவரால் என்னென்ன சொல்ல முடியும் என்பதை எண்ணிப்பாரேன், தம்பி!

“கல்லூரியா! பெண்கள் கல்லூரியா! ஏற்படுத்தலாமே! அதிலென்ன கஷ்டம்! எத்தனையோ கல்லூரிகள் ஏற்படுத்தி இருக்கிறோமே. இங்கே எந்த இடம் நல்ல இடம், கல்லூரிக்கு?

இவ்விதம் பேசமுடியும்; பேசுகிறார்கள். உள்ளம் பூரிக்கிறது பிரமுகருக்கு.

இருக்கிறது நல்ல இடம்; ஊருக்கு மையமாக; ஒரே சதுரம்; அறுபது ஏக்கர்.

என்கிறார் என்று வைத்துக் கொள்ளேன், உடனே மந்திரியின் மோட்டார் கிளம்புகிறது; ஜீப் முன்னாலே பறக்கிறது; பக்கத்தில் பிரமுகர் ; இடத்தைப் பார்வையிடச் செல்கிறார்கள்.

“உங்க பேட்டை ஓட்டு எப்படி?”

என்று அந்தச் சமயத்தில் மந்திரி கேட்டால் என்ன பதில் வரும்?

“எல்லாம் ‘ஐயா’ சொல்கிறபடிதான்! காங்கிரசுக்குத்தான்”

இடத்தைப் பார்வையிடுகிறார்கள்; தரமான இடம் என்கிறார் மந்திரி; ஆமாம்! என்கிறார் அதிகாரி! அகமகிழ்ச்சி பிரமுகருக்கு; கல்லூரி வந்துவிடும் என்பதனாலே மட்டுமல்ல; நெடுநாளாக விலை போகாதிருந்து வந்த அந்த நிலத்தை நல்ல விலைக்கு விற்றுவிட முடியும் என்பதால்; நிலம் பிரமுகருடையது; இந்த விவரம் விளக்கப்பட்ட பிறகு அந்தப் பிரமுகர், ஐம்பது பேர் சுட்டு வீழ்த்தப்பட்டார்களே அந்தக் கொடுமையையா எண்ணிக் கொண்டிருப்பார்; ஏகர் ஐயாயிரம், அறுபது ஏகர்! மொத்தத்தில் 3 இலட்சம்!! இந்தக் கணக்கிலே அல்லவா அவர் உலவிக் கொண்டிருப்பார். மகனை இழந்த மாதா கதறுவதா காதில் கேட்கும் புதுப்புது நோட்டுகளை எண்ணும்போது எழுகிறதே இன்பநாதம், அது!!

தம்பி! நாம், மக்களின் இதயம் நமது பக்கம், ஆகவே, தேர்தலிலே வெற்றி நமது மக்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது, காங்கிரசாட்சியின் கொடுமைகளை எடுத்துப் பொதுமக்களிடம் விளக்கிக்கொண்டு இருக்கும்போது, இந்தக் கல்லூரிப் பிரச்சினை படை