பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காஞ்சிக் கடிதம்: 18

மனிதனும் மிருகமும்


மக்களுக்கும் மாக்களுக்கும் உள்ள வேறுபாடுகள்
இராகுல சங்கிருத்தியாயனின் படப்பிடிப்பு
விஞ்ஞான விற்பன்னர்களின் கருத்துரைகள்
வெள்ளைப்பாண்டி கவிதையால் எழுந்த எண்ணங்கள்

தம்பி,

அடவியிலே அலைந்துகொண்டும், குகைகளிலே பதுங்கிக்கொண்டும், கல்லையும் கட்டையையும் கருவிகளாகக் கொண்டு மிருகங்களுடன் போரிட்டுக்கொண்டும் காயோ, கனியோ, கிழங்கோ, மிருகத்தின் இறைச்சியோ, பசித்தீயைப் போக்கிக்கொள்ள எதனையோ உண்டு, கதிரவன் கக்கிடும் வெப்பத்தாலும், கடுங்குளிராலும், பெருமழையாலும், பேய்க் காற்றாலும், நிலநடுக்கத்தாலும், காட்டுத் தீயினாலும் அலைக்கழிக்கப்பட்டு, கொல்வது கொல்லப்படுவது, துரத்துவது துரத்தப்படுவது என்ற நிலையில், இருந்துவந்த மனிதகுலம் இன்று விண்ணகத்து விந்தைகளைக் கண்டறிந்திட, முனைந்திடும் காலகட்டம் வந்து சேர்ந்திருக்கிறது. எத்தனை நெடிய பயணம்! எத்தனை ஆபத்துக்களையும் அழிவுகளையும் எதிர்த்து நடாத்தப்பட்ட பயணம்! எங்கு இருந்தான்! எங்குச் செல்கிறான்!! எவ்விதம் இருந்து வந்தான், எவ்விதமான மாறுதலைப் பெற்றுக் கொண்டிருக்கிறான்! குகைகளில், மொழி அறியாது, தாய்க்கும் தாரத்துக்கும், உடன்