138
பிறந்தாளுக்கும் உள்ளத்தை வென்றாளுக்கும் வித்தியாசம் தெரியாது, மிருக இச்சையை எப்படியோ தீர்த்துக் கொண்டு, உறுமிக் கிடந்தவன், இன்று சமூகக் கட்டுக்கோப்பும் சட்ட திட்டங்களும் பெற்று, இந்த அவனியைத் தனது விருப்பத்தின்படி உருமாறச் செய்ததுடன் நில்லாது, மேலே மேலே செல்கிறான்; சென்றபடி இருக்கிறான்; வேகவேகமாக; விதவிதமான முறைகளைத் துணைகொண்டு; ஒளி ஒலி இவற்றின் வேகத்துடன் போட்டியிட்டபடி!! பெற்ற வெற்றிகள் பெறவேண்டிய வெற்றிகளைத்தான் நினைவுக்குக் கொண்டு வருகின்றன! சென்ற இடம். இனியும் செல்லவேண்டிய இடத்துக்கு தூண்டுதலைத் தருகிறது! பயணம் முடிவு பெறவில்லை! பயணத்தின் முடிவு தெரியவுமில்லை! எங்கே செல்கிறான்? அறிந்திட நேரமில்லை; நினைப்பும் எழவில்லை! பயணம் செய்திடவே காலமெல்லாம் செலவாகிறது! எங்கே செல்கிறான்? காற்று எங்கே செல்கிறது? ஒலியும் ஒளியும் எங்கே செல்கின்றன? விடை உண்டா இவ்வினாக்களுக்கு? உண்டு எனில், அஃதே, மனிதகுலம் மேற்கொண்டுள்ள பயணத்தின் பொருளையும் அறிந்திடத் துணைசெய்யும். செல்லும் இடமும், செல்வதன் நோக்கமும் அறிந்த பிறகு பயணத்தைத் தொடரலாம் என்று மனிதன் ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை. சென்றுகொண்டே இருக்கிறான்! புதிது புதிதாகப் பலவற்றினைக் கண்டறிய வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டு, சென்றவண்ணம் இருக்கிறான். எதனாலோ ஈர்க்கப்பட்ட நிலையில், சென்றபடி இருக்கிறான். சந்திரமண்டலத்துடன் அந்தப் பயணம் நின்றுவிடப் போவதில்லை! செவ்வாய் மண்டலம் அழைக்கிறது!! காணவேண்டிய மண்டலங்கள், இன்னும் எத்தனை எத்தனையோ உள்ளன! எல்லாம் புரிந்துவிட்டது. எல்லாம் கிடைத்துவிட்டது, இனிப் பயணம் தேவையில்லை என்று கூறிடும் கட்டம் இல்லவே இல்லை! சென்றுகொண்டே இருப்பது மனிதகுலத்தின், பொழுது போக்குமல்ல, தொழிலும் அல்ல; இயல்பு! இயங்கும் நிலை உள்ளமட்டும் இந்த இயல்பு இருந்தே தீரும், சுற்றிடும் பம்பரம் கண்டு வியந்திடும் குழவிபோல, பறந்திடும் விமானம் கண்டு மகிழ்ந்திடும் இளைஞன் போல, இன்று மனிதகுலப் பயணத்திற்கான வழிவகைகளைக் கண்டறிந்து, ஒரு விந்தையிலிருந்து மற்றோர் விந்தைக்கு அழைப்பு விடுத்திடும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு-