பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139

களையும் செயல்முறைகளையும் கண்டு, நாம் பெருவியப்படைகிறோம்.

உண்டு உறங்கி, உறவாடி இனம் பெருக்கி, மாண்டு மடிந்துபோவது மனித குலத்தின் செயலின் அடிப்படை. கிடைத்ததை உண்டு, அலுப்பினால் வீழ்ந்து உறங்கி, வலிவு காட்டி உறவாடி இனம் பெருக்கி, அழிவு தன்னை நோக்கி வரும்போது எதிர்த்துப் பார்த்து, இயலாத போது மாண்டுபோவது, மனிதகுலத்தின் பாலபருவ நிலையாக இருந்தது. இந்த நிலையிலிருந்து, தேவைப்படுவதை உண்பது, உண்பனவற்றை உண்டாக்கிக்கொள்வது வேலை செய்வதால் அலுப்படைவது, அதனால் இழந்துவிட்ட வலிவினைத் திரும்பப்பெற உறங்குவது, உடல் உணர்ச்சிக்காக மட்டுமின்றி உள்ளத்தில் எழுந்திடும் பற்று பாசம் காதல் எனும் உணர்ச்சிகளைச் செம்மைப்படுத்தி உறவு முறையினை வகுத்துக்கொண்டு அதன்படி ஒழுகுவது, சாவு வந்திடும் என்று தோன்றிடும் போது, தடுப்பு முறைகள் தேடுவது, இறுதியில் மடிந்து போவது எனும் கட்டம் வருவதற்குள் மனிதன் பலப்பல நூறாயிரம் ஆண்டுகளைக் கழித்துவிட்டான்; ஆண்டுகள் என்ற காலக் கணக்குக்கூடத் தெரியாத நிலையிலேயே, எத்தனை எத்தனையோ ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கழித்துவிட்டான். மனிதன், உருப்பெற்று உலவத்தொடங்கி ஐந்து இலட்சம் ஆண்டுகளாகின்றன என்று விஞ்ஞான விற்பன்னர்கள் கூறுகின்றனர். மிருக நிலையிலேயே, மனிதன் நீண்ட நெடுங்காலத்தைக் கழித்து விட்டிருக்கிறான். எனினும், துவக்க முதலே, மனிதன் சில தனித்தன்மைகளையும் தனிச் சிறப்பினையும் பெற்றிருந்ததால், மிருக நிலையினை மாற்றிக்கொள்ளும் முயற்சியிலே ஈடுபட்டு, மெள்ள மெள்ள வெற்றி கண்டான். மிருகங்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ற இயல்பைப் பெறுகின்றன; அந்த இயல்பு, மாற்ற முடியாததாகி விடுகிறது. உறுமிக் கொண்டிருந்த புலியும், சீறிக்கொண்டிருந்த பாம்பும், கொத்திக்கொண்டிருந்த வல்லூறும் இன்றும் அதே இயல்புடனேயே இருந்திடக் காண்கிறோம். மனிதனைவிட மிருகங்கள், எத்தனையோ காலத்துக்கு முன்பிருந்தே உள்ளன; எனினும், இயல்பு மாறவில்லை; மாற்றிக்கொள்ளும் திறமை மிருகங்களுக்கு அமையவில்லை.