பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

இயல்பு, சுற்றுச்சார்பினாலே உருப்பெறுகிறது, வளருகிறது; எனவே, இயல்பு மாறவேண்டுமெனில் சுற்றுச்சார்பு மாறவேண்டும்; மாற்றி அமைக்கப்பட வேண்டும்; அதற்கான தனித்திறமை மிருகங்களிடம் இல்லை; எனவேதான் இயல்பு, அன்று இருந்தது போன்றே இன்றும்—மிகப் பெரும் அளவுக்கு—இருந்திடக் காண்கிறோம்.

மிருகங்களின் உருவ அமைப்பு, நடமாட்ட முறை இவற்றிலே ஏற்பட்டுவிட்ட மாற்றங்கள்கூட, தாமாக விரும்பி, முயன்று ஏற்படுத்திக்கொண்ட மாற்றங்கள் அல்ல. இருந்துவந்த சுற்றுச்சார்பு தானாக மாற்றமாகி, அதன் காரணமாக, மிருகங்களின் நிலையிலேயும் சில மாற்றங்கள் ஏற்பட்டன. ஏற்படுத்திக் கொள்ளவில்லை!! இதிலேதான், மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் அடங்கி இருக்கிறது.

யானை முதல் பூனைவரை, பாம்பு பறவை பூச்சி புழு என்பவைகள் ஈறாக, வடிவமாற்றம் நிரம்ப ஏற்பட்டுள்ளன என்பதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து கூறுகின்றனர்.

இன்று காணப்படும் யானைக்கும், பண்டு இருந்து வந்ததற்கும், உள்ள வித்தியாசத்தைக் காணும்போது, திடுக்கிட்டுப் போய்விடுவோம். நீர் வாழ்வன, நிலம் வாழ்வன, ஊர்வன, பறப்பன, எனும் எவற்றிலும், பெரிய மாறுதல் வடிவத்திலே ஏற்பட்டுவிட்டன. குதிரை காட்டுக் குதிரையாக இருந்த காலத்திலிருந்து வெகுவாக முன்னேறி, இன்றைய நிலையினைப் பெற்றது. நகரக்கூட முடியாதபடியான மாமிச மலையாக இருந்துவந்த பல மிருகங்கள் அழிந்தே போய்விட்டன. இன்று உள்ள மிருகங்கள் நமது முன்னோர்கள் எவ்விதம் இருந்தனர் என்று கண்டறியுமானால், வெட்கித் தலைகுனியும். மிருகங்களைச் சொல்கிறோமே! நமது இலட்சணம் மட்டும் என்ன! நமது மூல மூதாதை குரங்கு!! பெருமைப்படத்தக்கது என்றா கூற மனம் வரும்.

சுற்றுச் சார்பினை மாற்றி அமைத்து இயல்பையும் வடிவினையும் அதற்கு ஏற்ப, மிருகங்கள் பெற்றிடவில்லை; மனிதன் மட்டுமே, சுற்றுச் சார்பினைத் தனக்கு ஏற்றதாக, வசதி அளிப்பதாக, அமைத்துக் கொண்டான்.