142
படி தடுத்துக் கொள்கிறானல்லவா! மானோ மாடோ கடுங்குளிரிடத்தில் கொண்டு செல்லப்பட்டால் என்ன செய்திட முடியும்! விறைத்து இறந்துவிடுகின்றன.
மிருகங்கள், தமக்கென்று அமைந்துவிட்ட உடலமைப்பு, இயல்பு இவற்றினை மட்டுமே கொண்டு செயல்பட வேண்டியிருக்கிறது; வேறு துணை—வேறு கருவி—வேறு முறை—பெற்றிடவும் பயன்படுத்திக் கொள்ளவும் முடிவதில்லை. நகர்ந்து செல்லும் உடலமைப்பும் இயல்பும் பெற்ற ஆமை, வேகமாகப் பாய்ந்தோடும் குதிரையின் துணைபெற்று, விரைந்து ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் சென்றிட முடியுமா! ஆமை, அந்த நாளிலிருந்து நகர்ந்துகொண்டுதான் இருந்திடுகிறது—வேகம் பெறமுடியவில்லை! குதிரை. எப்போதும் வேகமான ஓட்டத்தைப் பெற்றிருந்திருக்கிறது.
மனிதன், தனக்கு உள்ள உடலமைப்பு, இயல்பு, என்பவைகளினால் மட்டும் கிடைத்திடும் நடவடிக்கைகளோடு நின்றுவிடவில்லை: வேறு துணை பெறுகிறான்; வேறு கருவிகளைத் தேடுகிறான்.
பறந்திடும் உடலமைப்பு மனிதனுக்கு இல்லை! ஆனால், பறந்து செல்கிறான், பறவைகள் வியந்திடத்தக்க விதத்தில்.
நீருக்கடியிலே இருந்திடத்தக்கதான உடலமைப்பு மனிதனுக்கு இல்லை; ஆனால், நீர்மூழ்கிக் கப்பல் அமைத்து, அதன் துணைகொண்டு, நீருக்கடியில் இருந்திடும் வழி பெற்றுவிட்டான்.
கிடைத்ததைக் கிடைத்தபடியே தின்றிடும் மிருக முறையிலிருந்து வந்தான் மனிதன்; இன்று கிடைப்பதை அல்ல, உற்பத்தி செய்வதை; அதே முறையிலே அல்ல, தன் சுவைக்கு ஏற்பப் பக்குவப்படுத்தியும், மற்றப் பொருளுடன் கலந்தும் உண்ணத் தலைப்பட்டுவிட்டான்.
மிருகங்கள், நடமாடுகின்றன, மனிதன் வாழுகின்றான் என்று கூறிடுவதற்கான காரணத்திலே இது முக்கியமானது; மனிதன் தனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான்; மிருகங்களுக்கு அமைந்து விடுகிறது.