பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143

மக்களுக்கும் மாக்களுக்கும் இயல்பிலேயும் நடவடிக்கைகளிலேயும் வேறுபாடு காணமுடியாதிருந்த காலத்தை இன்று ஆராய்ச்சியாளர்கள், எடுத்துக் காட்டுகிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் மாக்களை வேட்டையாடுவதும், மாக்கள் மக்களைப் பிய்த்துத் தின்பதும் மாறி மாறி நடைபெற்றுவந்த நிகழ்ச்சிகளாக இருந்திருக்கின்றன.

இராகுல சங்கீத்ராயன் எனும் ஆராய்ச்சியாளர், கி.மு. 6000-ல், இருந்த நிலைமை பற்றி எழுதியிருப்பதைப் பார்க்கும்போது, எந்தவிதமான வாழ்க்கை முறையிலிருந்து மனித குலம் இன்றைய புதுமை வாழ்க்கை முறைக்கு வந்திருக்கிறது என்பது புரிகிறது; புரியும்போது வியப்பு, திகைப்பூட்டும் அளவுக்கு ஏற்படுகிறது.

பனிப்படலம் மிகுந்த வால்கா நதிப் பிரதேசத்தைக் காட்டுகிறார் ஆராய்ச்சியாளர். நீலநிற வானம் மேலே! கீழே பனி கப்பிக் கொண்டுள்ள நிலப்பரப்பு. பெரிய பெரிய மரங்கள்—கிளைகளிலே பனிக் கட்டிகள். மிருகங்களின் உறுமல், பட்சிகளின் கலகல ஒலி, வண்டுகளின் ரீங்காரம் எதுவும் இல்லை. திகைப்பூட்டும் அமைதி.

மலைகளிலே இயற்கையாக அமைந்துள்ள குகைகளே வீடுகள்!

ஒரு கிழவி—ஆடை இல்லை—கற்றை கற்றையாக ரோமம் அடர்ந்திருக்கும் நிலையில்—கண்களில் ஒளி இல்லை—ஒரு வெறிச்சிட்ட பார்வை.

எலும்பைச் சுவைத்தபடி சில பெண்கள்.

அதிலே ஒரு துண்டு வீசப்படுகிறது அழுகுரலெழுப்பும் குழந்தையிடம்.

குகையிலே பதுங்கிக் கிடக்கும் மனிதமிருகங்கள்!

நெருப்பு மூட்டிட விறகு தேடி, கட்டுகளாக்கித் தூக்கிக்கொண்டு வருகிறார்கள் இளம் பெண்கள்.

ரோமம் நீக்கப்படாத தோலால் ஆடை, அவர்களுக்கு.

நீண்ட கூர்மையுள்ள கம்பு, நன்றாகத் தீட்டிக் கூர்மையாக்கப்பட்ட கல் அம்பு!