145
கொள்வதிலே வரம்புவகை, முறைநெறி என்பவைகளைப் பார்க்காமல் நடந்துகொண்டு வந்த நாட்களிலே, உண்பது உறங்குவது, உறவாடுவது, போராடுவது. பெறுவது தருவது, என்பவைகளுக்கு அடிப்படையாக அமைந்திருந்த அதே உணர்வுகள், இன்றும் அதே விதத்திலே கிளம்பி, மனிதக் குலத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதை அறிகிறோம்; அறியும்போது, முன்னேறிவிட்டோம் என்று கூறிக் கொள்ளும் முழு உரிமையை மனிதகுலம் பெறவில்லை என்பது தெளிவாகிறது.
இன்றும், எனக்கு, உனக்கு என்பதற்காகவும், என்னுடையது உன்னுடையது என்பதற்காகவும் அன்று போலவே அமளி நடந்தபடி இருக்கிறது! கருவிகள் மாறிவிட்டன, கருத்து மாறிவிடவில்லை, போர் முறைகள் மாறிவிட்டன, போர் உணர்வு மாறவில்லை.
கோபம் கொந்தளிப்பு, தாக்குதல் தப்பித்தல், பாய்வது பதுங்குவது—எல்லாம் அன்று போலவே இருந்திடக் காண்கிறோம்.
மலைமுகடுகளில், அடவிகளில், அருவிக்கரைகளில் அமளிகள் நடைபெற்றன முன்பு; இப்போது நவநாகரிக நகர்களில், மின்னிடும் மாளிகைகளில், அமளி! முன்பு கல்லாலான கருவிகள்! இன்று அணு ஆயுதம்!
அழிக்கும் உணர்வும், அழிவிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் உணர்வும், அந்த உணர்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ள போராட்டமும், அன்று போலவே இன்றும் இருந்திடக் காண்கிறோம்.
முன்பு, வாழ்நாளில் மிகப் பெரும்பகுதி, போராட்டமாகவே இருந்துவந்தது என்று கூறலாம்; இன்று வாழ்நாளில் ஒரு போராட்டத்துக்கும் மற்றொரு போராட்டத்துக்கும் இடையிலே, ‘அமைதி நாட்கள்’ இருக்கின்றன. இந்த அளவுதான் மனிதகுலம் முன்னேற்றம் காணமுடிந்திருக்கிறது.
அரசு இல்லை ஆகவே அமைதி இல்லை! மார்க்கம் இல்லை ஆகவே ஒழுக்கம் இல்லை! சட்டம் இல்லை ஆகவே சாந்தி இல்லை! அறநூல் இல்லை ஆகவே அறம் இல்லை! அறிவாளர் இல்லை ஆகவே அறிவுத் தெளிவு இல்லை!—அன்று, மாக்களுக்கும் மக்களுக்கும் அதிக அளவு மாறுபாடு இல்லாத காலத்தில்.