146
இன்றோ! அரசு இருந்தும் அமைதி இல்லை; மார்க்கம் இருந்தும் ஒழுக்கம் இல்லை; அறநெறி காட்டப்பட்டும் அறம் நிலைத்து நிற்கவில்லை; அறிவாளர் முயன்றும் அறிவுத் தெளிவு ஏற்படவில்லை!
ஆனால், எழிலூர்கள் பலப்பல, தொழிலின் ஏற்றம் மிகப்பல! மாடமாளிகை, கண்ணைப் பறிக்கத்தக்க விதமாக! கலை கவர்ச்சி தருவதாக! இவைகளுக்குக் குறைவு இல்லை.
இவைகளைக் காட்டிலும் மிக முக்கியமானது என்று கூறத்தக்கதான விஞ்ஞான அறிவுப்பெருக்கத்துக்கோ ஒரு அளவு இல்லை! மேலே மேலே செல்கிறது மனிதகுலம், விண்ணிலே உள்ள கிரகங்களைத் தனது ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டுவர.
புறத்தோற்றத்தைக் காணும்போது. மனிதகுலம் வெகுதூரம், வேகவேகமாக முன்னேறி, உன்னதமான கட்டத்தில் வந்திருப்பது தெரிகிறது.
அகத்தில் நெளியும் உணர்வுகளையும், அந்த உணர்வுகள் ஆட்டிப் படைத்திடுவதற்கேற்ற வண்ணம் மனிதகுலம் ஆடித் தொலைப்பதையும் பார்க்கும்போது முன்னேற்றம் அடைந்துவிட்டோமா என்பதிலேயே பலமானதோர் சந்தேகம் ஏற்படத்தான் செய்யும்.
வாழப் போரிட்டுத் தீரவேண்டியுள்ள நிலையும், வலிவைக் காட்டிப் பகையைத் தீர்த்துகட்டும் முறையும், காடு மிகுதியாக இருந்த நாட்களில் இருந்துவந்தது போலவே காடு குறைந்து நாடு எழில்பெற்ற நாட்களிலேயும் இருக்கிறது; இதைப் பார்க்கும்போது, மனிதகுலம் பெற்றுவிட்ட முன்னேற்றம், அடிப்படையை மாற்றுவதாக இல்லை என்பது புரிகிறது; கவலை மிகுந்திடுகிறது.
காட்டுக் குணத்தைப் போக்கிக்கொள்வதிலே பெருமைப்படத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்படாத நிலையில், மனிதகுலத்திடம் விஞ்ஞானம் புதிய புதிய மிகுதியும் வலிவுள்ள கருவிகளை, முறைகளைக் கொடுத்து விட்டிருக்கிறதே என்பதனை எண்ணி இன்று பெருத்த கவலைக்குள்ளாகிவிட்டுள்ளனர் பேரறிவாளர் பலர். உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்வதிலே மனிதகுலம் வெற்றி பெறாத நிலையில், உணர்வுகளின் அடிப்படை-