பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

147

யிலே அமைந்துவிடும் நடவடிக்கைகளுக்குப் பயன்பட்டுவிடும் விதமாக, இன்றைய விஞ்ஞான அறிவு பல புதிய கண்டிபிடிப்புகளைக் கொடுத்துவிட்டிருப்பது, குருடன் கையில் சிக்கிவிட்ட தீப்பந்தம் போன்ற நிலையை உண்டாக்கிவிட்டிருக்கிறது.

இதனை எண்ணும்போதுதான் இன்றைய நிலையில் ஒரு பெரும்போர் மூண்டுவிடுமானால், உலகமே அழிந்துபடும் என்ற அச்சம் எழுகிறது. மனிதகுலம் அழிந்துபடாமல் காப்பாற்றப்படவும். உலகம் மீண்டும் காடு ஆகிடாமல் தடுத்திடவும் வேண்டும் என்ற தூய்மை மிக்க பொறுப்புமிக்க கருத்தினைக் கொண்டவர்கள், உலகப் பெரும்போர் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை உருக்கத்துடன் எடுத்துரைத்து வருகின்றனர்.

அனேகமாக எல்லா நாட்டுத் தலைவர்களும் உலகப் பெரும்போர் மூண்டுவிடக்கூடாது என்பதிலே மிகுந்த அக்கறை காட்டிப் பேசி வருகின்றனர்.

ஒரே ஒரு நாட்டின் தலைவர் மட்டுமே, பெரும்போர் மூளட்டுமே! உலகிலே அழிவு நடமிடட்டுமே! அழிந்தது போக, மிகுந்திருப்பதிலிருந்து மீண்டும் ஒரு புதிய வளர்ச்சி துளிர்க்கும் என்று பேசுகிறார். கூசாது இத்தகைய கொடிய கருத்தினைக் கூறிவருவது மக்கள் கொல்லப்பட்டு மலைமலையாகக் குவிக்கப்பட்டாலும் என்ன என்ற விதமான இரக்கமற்ற இயல்பு கொண்டுள்ள சீனத்துத் தலைவன் மாசே-துங் எனும் வெறியன் மட்டுமே.

மனிதகுலம் மெத்தப் பாடுபட்டு, பலப்பல ஆயிரம் ஆண்டுகளாக நடத்திய பயணத்தின் பலன் அனைத்தையும் ஒரு நொடியில் பாழாக்கி, மறுபடியும் கற்காலத்துக்குச் சென்றிடும் நிலை பிறந்திடும், ஒரு பெரும்போர் மூண்டிடின் என்ற அச்சமும் பொறுப்புணர்ச்சியும், ஓரளவுக்கு, இன்று அரசோச்சுகிறது. இந்த நல்லியல்பையும் நாசமாக்கிடும் விதத்தில், சீனத்துப் போர் வெறியர்களும் அவர்களின் உறவிலே உவகை கொள்ளும் பாகிஸ்தான் தலைவர்களும், நடந்து கொண்டு வருவது, மனித குலத்துக்கே இழைக்கப்படும் மாபெருந்துரோகமாகும்.

இருப்பது போதாது மேலும் வேண்டும் என்ற நினைப்பும், நமக்கு மட்டுமே இருக்கவேண்டும் அதனைப்