149
அறிவைக்கொண்டு மனிதகுல அழிவுக்கு வழி கண்டு பிடிக்கும் கொடுஞ்செயலில் இன்றைய மனிதகுலம் ஈடுபட்டிருக்கிறது.
டாக்டர் எட்வர்டு டெல்லர் எனும் விஞ்ஞான விற்பன்னர், சென்ற திங்கள், விஞ்ஞானத் துறையை மக்களின் நல்வாழ்வுக்குப் பயன்படும்விதமாகக் கட்டுப்படுத்தும் உரிமை விஞ்ஞானிகளிடம் இல்லாமலிருப்பது குறித்தும், அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கக் கூசிடும் கேடான காரியங்களுக்கு விஞ்ஞான அறிவு ஆக்கித்தரும் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்தும் மிகுந்த கவலையைத் தெரிவித்திருக்கிறார்.
விஞ்ஞானி, பொருள்களைப் படைத்திட விரும்பும் பேரறிவாளன்—அழிவு கண்டு உள்ளம் வெதும்பிடத்தான் செய்வான். தூங்கும் பனிநீர் தங்கிடும் மூங்கில் இலையெனினும் அதனிடம் காணக்கிடக்கும் கவர்ச்சி அதனிடம் உள்ள உயிர்ப்பு, இதனை மேலும் மேலும் வலிவுள்ளதாக்கிட பொலிவுள்ளதாக்கிட விரும்பும் விஞ்ஞான விற்பன்னர்கள், மனிதர்கள் மாக்களைப் போல ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதற்கு, விஞ்ஞானம் பயன்படுத்தப்படுவதுகண்டு, உள்ளம்நொந்து போகின்றனர்.
பசியாலும் பஞ்சத்தாலும் தாக்கப்பட்டோ, இயற்கை விளைவிக்கும் கொடுமைகளால் கொட்டப்பட்டோ, நோயூட்டும் கிருமிகளால் அரிக்கப்பட்டோ, கூனிக் குறுகி, குற்றுயிராகிடும் மக்களை, நிமிர்ந்து நின்றிடச் செய்திட நிம்மதியான வாழ்வு பெற்றிட வழி காண இரவு பகல் விழித்திருந்து, பொருள்களின் தன்மையினை ஆய்ந்தறிந்து, புது முறைகளைக் கணடுபிடித்துத் தந்திடும் விஞ்ஞானிகள், அவர்கள் பெற்றளித்திடும் பேருண்மைகளே மனித குல அழிவுக்குப் பயன்படுத்தப் படுவதனைக் காணும்போது, ஏன் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைத் தந்தோம் என்று எண்ணி வேதனைப்படத்தான் செய்கிறார்கள்.
இதனால்தான் டாக்டர் எட்வர்டு டெல்லர் எனும் விஞ்ஞான விற்பன்னர் மனித குலத்துக்கு உள்ள இன்னலைத் துடைத்து, இன்ப வாழ்வு அளித்திடும் வழிகள் காணவே, விஞ்ஞானம் உடனடியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.