பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

டாக்டர் ராபாட் ஒப்பன் ஈமர் எனும் மற்றோர் விஞ்ஞான விற்பன்னரும் இதுபோன்றே கூறியுள்ளார். விஞ்ஞானம் இதுவரை பெற்றளித்துள்ள பெரு வெற்றிகளால், மனித குலம் எந்த வகையிலும் அளவிலும் பயன் பெற்றிருக்கிறது என்பது பற்றிய கணக்கெடுத்தாக வேண்டும் என்பதற்காகவே பல்கலைக்கழகமொன்றில் பார்த்துவந்த வேலையைக்கூட உதறித்தள்ளிவிட்டார் இந்த விஞ்ஞானத்துறைப் பெருமகன்.

விஞ்ஞானத் துறையின் வளர்ச்சிக்காகப் பெரும் பொருள் செலவிடப்பட்டு வருகிறது; காலத்தையும் கருவூலத்தையும் கணக்கற்ற அளவு செலவிட்டுத்தான் பேருண்மைகளைக் கண்டறிந்து, புதிய கண்டுபிடிப்புகளைத் தருகின்றனர் விஞ்ஞான விற்பன்னர்கள்.

மின்னிடும் விண்மீன்களின் இயல்புகளைக் கண்டறியவும், விண்வெளியில் உலவிடவும், ஆங்கு உள்ள கிரகங்களைக் காணவும், எத்தனை எத்தனைக் கருவிகள்! என்னென்ன முறைகள்! விண்வெளியிலே நடந்தே காட்டிவிட்டான் சோவியத் நாட்டு மாவீரனொருவன், விஞ்ஞானத்தின் துணைகொண்டு.

இவை எவரையும் வியப்பில் ஆழ்த்தும்; ஐயமில்லை. எனினும் மறைந்த மாமேதை ஆல்டேன் என்பார், விண்வெளியின் ஆராய்ச்சிக்காகப் பெரும் பணம் செலவிடுவது தேவைதானா! இப்போது கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைதானா விண்வெளி விஷயம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பே கேட்டிருந்தார்.

இப்போது விண்வெளி ஆராய்ச்சிக்காகப் பல்வேறு நாடுகளும் செலவிடும் தொகை, கேட்போருக்கு மயக்க மூட்டும் அளவினதாக இருக்கிறது.

விண்வெளித்துறை பற்றிய ஆராய்ச்சிக்காக மட்டும் ஆண்டொன்றுக்கு 10,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது என்கின்றனர்.

இத்தனை பெருந்தொகையை, விண்வெளி ஆராய்ச்சிக்காகச் செலவிடுவதனைக் காட்டிலும், மனித உடற்கூறு பற்றிய ஆய்வுத்துறைக்கும், உணவுத்துறை, பொருள் ஆக்கத்துறை, மருத்துவத்துறை ஆகியவற்றினுக்கும் செலவிட்டிருக்கலாம்—செலவிட வேண்டும் என்ற கருத்தினைக் கூறிச் சென்றார் ஆல்டேன்–