பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

151

மக்களின் இயல்புகளே பெரும்பாலும் அவர்களுடைய நடவடிக்கைகளுக்குக் காரணம்; அவர்களின் நடவடிக்கைகளைச் செம்மையாக்கிட வேண்டுமானால், இயல்புகளை மாற்றிட, அல்லது கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்; விஞ்ஞானம் அதற்குப் பயன்பட வேண்டும் என்ற கருத்து இன்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள உண்மைகளில் ஒன்றாகும்.

குற்றவாளி ஒரு நோயாளி. குற்றவாளியைத் தண்டிப்பதனால் மட்டும் அவனைத் திருத்திவிட முடிவதில்லை.
ஒருவர் இருவரைத் திருத்திவிட்டாலும் குற்றம் எழாதபடி தடுத்துவிட முடிவதில்லை.

குற்றவாளி, ஒரு நோயாளி! ஆகவே அவனுக்கு உள்ள நோயைப் போக்கவேண்டும்; போக்க முடியும். இந்தக் கருத்துகளை இன்று அறிவாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஆனால், இதனைத் தொடர்ந்து, இயல்பினைக் கெடுத்திடும் நோயை நீக்கிட வழி கண்டறிந்திடும் முயற்சியில், விஞ்ஞானிகள் ஈடுபட்டு, புதிய முறைகளைச் சமைத்து அளித்திடப் போதுமான தொகை செலவிடப்படுவதில்லை.
நிலவிலே காணப்படும் ‘கறை’யின் தன்மையைக் கண்டறியச் செலவிடுவது உடனடியாகத் தேவையா, அல்லது மக்களுடைய மனத்திலே மூண்டிடும், அழுக்குகளைப்போக்கிட வழி கண்டிடச் செலவிடுவது உடனடித்தேவையா என்ற கேள்வி பிறந்துவிட்டிருக்கிறது.

குற்றவாளி ஒரு நோயாளியே என்ற பேருண்மையின் அடிப்படையில், நரம்புகள், உடல் உறுப்புக்களிலே சில ஆகியவற்றிலே பழுது பார்ப்பதன்மூலம், புதுப்பிப்பதன் மூலம், குற்றம் செய்திடும் இயல்பினை மாற்றிட முடியும் என்று கூறுகின்றனர், அந்தத் துறையின் விற்பன்னர்கள். ஆனால், அந்தத் துறைக்காகச் செலவிடப்படும் தொகை போதுமான அளவினதாக இல்லை. விண்வெளிபற்றிக் கிளம்பிவிட்டுள்ள வேட்கை பெரும் தொகையை விழுங்கி விடுகிறது.