பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

குடல் வெந்து கிடப்பவன் வாய் நாற்றமடிப்பதும், நீர் கொண்டவன் தும்மியபடி இருப்பதும், வெப்ப நோயாளன் இருமிக்கிடப்பதும் காண்கிறோம். அவர்களின் நோயைப் போக்கிட மருந்தளிக்காமல், வாய் நாற்றக்காரனுக்கு நாற்பது ரூபாய் அபராதம், தும்மலொன்றுக்கு எட்டணா கட்டவேண்டும், இருமலுக்கு இரண்டு ரூபாய் அபராதம் என்று முறை கூறினால் எப்படி இருக்கும்; முறையாகுமா? ஆகாது. அதுபோலத்தான், ஒருவனுக்கு அமைந்து விட்ட உறுப்புகளின் தன்மைக் கோளாறு காரணமாக ஏற்பட்டுவிடும் நடவடிக்கைகளுக்காகத் தண்டனை விதித்திடும் முறை என்று கூறுகின்றனர்.

உடற்கூறு பற்றிய அறிவுத் துறையிலே கண்டறிய வேண்டுவன நிரம்ப உள்ளன. அந்தத் துறையிலே நல்ல வெற்றி கிட்டக்கிட்ட, குற்றவாளிகளாகப் பலரை ஆக்கிவிடும் அந்த நோயையே போக்கிவிடலாம்; பெருமளவு குறைத்துவிடலாம் என்கின்றனர்.

மக்கள் தொகை எத்தனை வேகமாகவும் அளவினதாகவும் பெருகினாலும் கூடக் கவலையில்லை. விவசாயத் துறையிலும், பொருள் ஆக்கத் துறையிலும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளைப் பெற்று அனைவருக்கும் ‘வாழ்வு’ அளித்திட இயலும் என்கின்றனர்.

நோயினால் மக்கள் மடிந்து போவது மட்டுமல்ல, பிழைத்துக் கொள்பவர்கள்கூட வலிவிழந்து போய்விடுவதன் காரணமாக, அவர்களின் உழைப்புத்திறன் கெட்டுப் போகிறது; அதன் காரணமாக உற்பத்தித்திறன் உருக்குலைந்து விடுகிறது. எனவே, நோய்களை நீக்கிட வழி காண வேண்டும்; காணமுடியும் என்கின்றனர்.

இந்தத் துறைகளில் செலவிடப்படும் பணம், மனித குலத்தின் இன்னலைத் துடைத்து இதம் தந்திட உடனடியாகப் பயன் தந்திடும். ஆனால், இந்தத் துறைகளுக்காகச் செலவிடுவதைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிகத் தொகையை வெறி என்று கூறத்தக்க ஆர்வ உணர்ச்சியுடன் அழிவுக் கருவிகளைக் காண்பதற்கான துறைகளுக்கு வல்லரசுகள் செலவிட்டு வருகின்றன!

மனிதனை, மிருக நிலையிலிருந்து விடுவித்து முன்னேற்றமடையச் செய்யப் பயன்பட வேண்டிய விஞ்-