பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153

ஞானம், அதனை முறைப்படுத்திக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளத் தவறிவிட்டதன் காரணமாக, மீண்டும் மனிதனை மிருக நிலைக்கே கொண்டுபோய்ச் சேர்க்கப் பயன்பட்டு வருகிறது என்ற கருத்து இன்று பரவிக் கொண்டு வருகிறது.

இந்தக் கருத்தின் வெற்றியைப் பொறுத்திருக்கிறது, மனித குலத்தின் எதிர்காலம்.

கூடி வாழ்தல், கேடு செய்யாதிருத்தல், உழைத்துப் பிழைத்தல், பகிர்ந்து அளித்தல் என்பவை பாராட்டத்தக்க பண்புகள் என்று பேசிடும் நிலை மாறி, இவையே இனி மனிதகுலத்தின் வாழ்வுமுறைகள் என்றாக வேண்டும். அதிலே எந்த அளவு வெற்றி கிடைக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடு மறையும்.

தம்பி! இந்த எண்ணங்கள் எனக்கு ஏற்படக் காரணம் என்ன என்று அறிந்துகொள்ள விரும்புகிறாயல்லவா! நான் ஏதும் பெரிய தத்துவ நூலைப் புதிதாகப் படித்து அதனால் ஏற்பட்ட எண்ணக் கொத்தளிப்புக் காரணமாக இதனை எழுதவில்லை. த. வெள்ளைப்பாண்டி, (பி.எஸ்.ஸி. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்) செயிண்ட் ஜான்ஸ் கல்லூரி இதழில் தீட்டிய கவிதை ஒன்றைக் காணும் வாய்ப்புப் பெற்றேன். அதனைப் படித்ததால் இத்தனை, எண்ணங்கள் எழுந்தன; உன்னிடம் சொல்லி வைத்தேன்.

இதோ அந்தக் கவிதையையும் தந்திருக்கிறேன்; படித்துப் பயன் பெற!

எண்ணில்லாப் பொறிகளினை விசைகள் தம்மை
இருள்போக்கும் மின்னொளியை நிறைத்து வைத்தாய்
மண்ணுக்குட் புகுந்தாய்நற் கனியைக் கண்டாய்
மனமெட்டாத் தொலைவினையும் கைக்குள் கொண்டாய்
கண்ணுக்குத் தெரியாத பொருளை எல்லாம்
கண்டறியும் நுண்கருவி பலவும் செய்தாய்
விண்ணினையும் காற்றினையும் அளந்தெடுத்தாய்
வியக்கின்றேன்; வியக்கின்றேன்; வியக்கின்றேனே;