156
சொக்கப்பனிடம் பட்ட கடன் விளக்கு ஆகாமல் மத்தாப்பாகிவிட்டால், வயலுக்குப் பாயாமல் விழலுக்குச் சென்றுவிட்டால், பணம் வீணாகிப் போகும்—பயன் கிடைக்காது. பயன் கிடைத்தாலல்லவா, கடனைத் திருப்பிச் செலுத்த முடியும்? கலியாணச் செலவுக்காகக் கடன் வாங்கிக்கொண்டு வந்து அதனைக் கழனி வாங்கச் செலவிட்டால் இரண்டோர் வருடத்தில் பட்ட கடனையும் தீர்த்துவிடலாம், கடன் படாமல் கலியாணத்தையும் பிறகு நடத்திக் கொள்ளலாம். அவ்விதமின்றி, கலியாணச் செலவுக்காகப் பெற்றுவந்த கடன் தொகையைக் கொண்டு காவடித் திருவிழா நடத்திவிட்டால், கலியாணந்தான் நடக்குமா, பட்ட கடனைத் தீர்க்கத்தான் வழி கிடைக்குமா! கந்தன் அருள் கிடைக்கலாம், அங்கே! மேலே!! இங்கே? கடன் கொடுத்தவன் ‘பிடிவாரண்டு’ அல்லவா அனுப்புவான்!
கடன்படுவது என்பதே அடியோடு தவறு அல்ல; தேவை, நேரம் இவைகளைப் பொருத்துக் கடன்படலாம்; அதனைக்கொண்டு தக்க பலன் கொடுக்கக்கூடிய செயலாற்றி, வருவாய்பெற்று, அதிலே மிச்சம்பிடித்து, பட்ட கடனையும் தீர்த்துவிடலாம், புதிய உடைமையையும் காணலாம். காண்கின்றனர், கருத்துடன் காரியமாற்றுபவர். கடனோடு கடன் கந்தப்பொடி பலம் பத்து-என்பார்கள் கொச்சை மொழியில். அதுபோலக் கடன் பட்டுப்பட்டு, கவைக்குதவாத காரியத்தில் செலவிட்டுவிட்டால், சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சோணாசலத்தைத் தேடவேண்டியதுதான்! இதுவே தவறு, மோசம். நான் சொல்வது இதனைவிட விசித்திரம், சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே கடன் வாங்குவது!
பருவச் சேட்டைமிகுந்த அரும்பு மீசைக்காரன் ‘ஐயா’ வைத்து விட்டுப்போன அறுபது வேலி நிலத்தைக் காட்டிப் பத்து ஆயிரம் தான் கடன் வாங்குகிறான் முதலில். வட்டி வளருகிறது, கேட்டனுப்புகிறார்கள்; மீண்டும் அதே புள்ளியிடம் மற்றுமோர் கடன் வாங்கி, பழைய கடனுக்கான வட்டியைச் செலுத்துகிறான்! செலுத்துகிறானா!! அந்தப் புள்ளியே, புதிய கடன் கொடுக்கும்போது, பழைய கடனுக்கான வட்டித்தொகையை எடுத்துக்கொண்டு மிச்சத்தைத்தான் கொடுக்கிறார்.