பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157

கடைசியில் என்ன நிலை? இன்னும் இருப்பது என்ன? அந்த அரும்புமீசை மட்டுந்தான் என்று ஊரார் கேலி பேசும் நிலை.

நான் இந்த ‘உல்லாச புருஷனை’ அல்ல, காணச்சொல்லிக் கேட்டுக்கொண்டது. இந்தியப்பேரரசு, நம்ம மாநில அரசு இவைகளையே பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காங்கிரஸ் அரசு, சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே மறுபடியும் கடன் வாங்குவது போன்ற நிலையிலேதான் நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் பட்ட கடனைத் தீர்க்க மறுபடியும் அமெரிக்காவிடமே கடன் வாங்கும் விந்தை நடந்தபடி இருக்கிறது.

நிலையில் இதேதான் மாநில அரசு! பேரரசிடம் பட்டுள்ள கடனைத் திருப்பித்தர, மாநில அரசுகள் மறுபடியும் பேரரசிடமே கடன் வாங்குகின்றன.

பேரரசிடம் மாநில அரசுகள் பட்டுள்ள கடன் தொகையில், 1965-66-ம் ஆண்டில் 274-கோடி ரூபாய் திருப்பித் தரவேண்டும்—தவணை முறைப்படி.

மாநில அரசுகள் பேரரசிடம் பட்ட கடன் தொகையைக் கொண்டு பயன் தரும் விதமாகச் செலவிட்டிருந்தால், பட்ட கடனைத் தவணை முறையிலே திருப்பித்தருவதற்கான வருவாய் கிடைத்திருக்கும். வருவாய் அந்த முறையில் கிடைக்கவில்லை.

எந்தப் பிரச்சினையையும் ஆராயும் போக்குடையவரும், காங்கிரஸ் கட்சியினருமான திரு. சந்தானம் மாநில அரசுகள் பெற்றுள்ள கடன் தொகையில் பாதிக்கு மேல், பயன் தராதவிதமாக, வருவாய் கிடைக்க முடியாத காரியங்களுக்காகச் செலவிட்டு விட்டதாகக் கூறுகிறார்.

நாம் கூறினால், அது பக்தவத்சலனாரின் அதி அற்புதமான மூளையைக் குழப்பிவிட்டுவிடுகிறது; ஆட்சியைக் கைப்பற்ற, எம்மை விரட்டச் சூழ்ச்சி நடக்கிறது என்கிறார். இது சந்தானம் சொன்னது; எதிர்க் கட்சிக்காரர் பேச்சு அல்ல. எனவே, எரிச்சல் எழத் தேவையில்லை.