159
பற்றிக் கவலைப்படுகிறார்கள் பலர்; பொருளாதார நிபுணர்கள்; பொறுப்புள்ள அதிகாரிகளாக இருந்தவர்கள்!
ஒரே ஒருவர் மட்டும், இதைப் பற்றிக் கவலை இல்லை என்று கூறுகிறார்; காமராஜர்!
சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடம் புதுக்கடன் வாங்குவது, நிலைமை எவ்வளவு மோசமாகி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது; காமராஜரோ, கவலை இல்லை என்று கூறுகிறார்.
சொக்கப்பனிடம் கடன்பட்டவர் எத்தப்பனாக இருந்தால், கொடுத்தவனுக்குத்தான் கவலை, வாங்கியவனுக்கு அல்ல! ஆனால், இந்தியப் பேரரசு எத்தப்பனாக முடியுமா! கொடுத்த கடனைத் திருப்பிப்பெற, கடன் கொடுத்தவன் எதை எதைத் தன்னிடம் ஒப்படைக்கச் சொல்லிக் கேட்பானோ என்ற அச்சமே வந்துவிட்டிருக்கிறது, பலருக்கு.
அமெரிக்காவிலிருந்து P.L. 480 என்ற சட்டப்படி இந்தியா பெற்றுள்ள பொருளுக்கான பணம், ரூபாயாகத் தரப்பட்டு அந்தத் தொகை இந்தியாவில் அமெரிக்காவின் கணக்கில் குவிந்துகொண்டு வந்திருக்கிறது.
இன்னும் கொஞ்ச காலத்தில் அமெரிக்கா இந்தியாவில் சேர்த்துவைத்துள்ள தொகை ஆயிரம் கோடி ரூபாயாகிவிடுமாம்! இப்போது 800 கோடிக்கு மேல் இருக்கிறதாம்.
இந்தத் தொகையை அமெரிக்கா இந்தியாவிலேயேதான் செலவிட வேண்டும்—அது நிபந்தனை.
அமெரிக்கா, வேறு சில வெளிநாடுகளுக்குத் தருவதாக ஒப்புக்கொண்டுள்ள பொருளை, இந்தியாவில் குவிந்துள்ள பணத்தைக் கொண்டு இந்தியாவிலே வாங்கி, அந்த வெளிநாடுகளுக்கு அனுப்பினால் என்ன? பணம் பாசி பிடித்துப்போகும் நிலையில் இருக்கிறதே! இந்தவிதமாகப் பயன்படுத்திக்கொண்டால் என்ன? என்ற பேச்சு அமெரிக்காவில் கிளம்பிவிட்டது. இதற்கு இந்தியப் பேரரசு இணங்கவில்லை. அமெரிக்க அரசு வற்புறுத்தவில்லை, இப்போதைக்கு! இந்தக் கருத்து அமெரிக்காவில் வலுப்பெற்றால், நிலைமை எப்படி மாற நேரிடும் என்பது