160
பற்றிக் கூறுவதற்கில்லை; ஆனால், நினைக்கும்போதே நடுக்கமெடுக்கிறது–விவரமறிந்தவர்களுக்கு.
அமெரிக்காவுக்குச் சொந்தமாகியுள்ள இந்தப் பெரிய தொகையைக் கொண்டு, இங்கே உள்ள பொருளை வாங்கி வெளிநாடுகளுக்கு அமெரிக்கா தன் கணக்கிலே அனுப்பினால் என்ன நேரிடுமென்றால், அந்த நாடுகளுக்கு அந்தப் பொருளை இந்தியா அனுப்பினால் இந்தியாவுக்குக் கிடைக்கக்கூடிய வெளிநாட்டுச் செலாவணி குறைந்துபோகும்; குறைந்து போனால், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரவழைக்கும் பொருளுக்காகப் பணம் செலுத்த முடியாத திண்டாட்டம் இந்தியாவுக்கு ஏற்பட்டுவிடும். இந்த நிலையைப் பயங்கரமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இத்தகைய சிக்கல்கள் பல முளைத்தபடி உள்ளன.
ஆனால், எதற்கும் அஞ்சாமல் சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே புதிதாகக் கடன்வாங்கும் விந்தைச் செயலில் ஈடுபட்டபடி இருக்கிறார்கள்; எதிர்காலத்தை இடருள்ளதாக்கியபடி உள்ளனர், மெத்தத் திறமையுடன்.
கடன் கொடுக்கும் நாடுகளுக்கு ஏற்படாத கவலை உங்களுக்கு ஏன் ஏற்படவேண்டும் என்று கேட்பவர்கள் உயர்ந்த இடத்திலே இருந்துவிடுவதனாலேயே அந்தப் பேச்சு உயர்ந்ததாகி விடாது; ஊர்மெச்ச வாழ்பவர்களின் பேச்சுக்கு எதிர்ப்புப் பேசி ஏன் வம்பை விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் விவரம் தெரிந்த பலர் அந்தப் பேச்சு அறிவற்றது என்பதனை எடுத்துக் கூறாமலிருக்கிறார்கள்.
இன்று உலகிலே அமைந்துள்ள இருபெரும் போட்டி முகாம்கள், அமெரிக்காவும்—ரஷியாவும் என்பது அனைவருக்கும் தெரியும்.
வளர்ச்சி பெறாத, புதிதாக விடுதலை பெற்ற நாடுகளை, தத்தமது முகாமுக்கு அழைத்துக்கொள்ள, அமெரிக்கா—ரஷியா எனும் இருபெரு அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு கடன் தருவது, இனாம் வழங்குவது, தொழில் நுட்ப அறிவு அளிப்பது, கூட்டுத் தொழில் அமைப்பது என்பவைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.