161
இந்தியப் பேரரசு, இந்த இருமுகாம்களில் எதிலும் சேராத ‘நடுநிலைக் கொள்கையைக் கொண்டது.
ஆனால் இந்தியப் பேரரசு, இந்த இரு முகாம்களிலும் தாராளமாகவும் ஏராளமாகவும் கடன் வாங்கியபடி இருக்கிறது.
இன்று இந்த இரு முகாம்களும், முகத்தைச் சுளிக்காமல், கேட்ட கடனைக் கொடுத்தபடி உள்ளன.
ஆனால், பெற்ற கடனை எப்படியும் திருப்பித்தர வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியின்படி, பணத்தைச் செலவிட்டு, தொழிலைப் பெருக்கி, வருவாய் கிடைக்கும் விதமாகப் பேரரசு நடந்து கொள்ளவில்லை.
மேலும் மேலும் கடன் வாங்கியே காலந்தள்ள வேண்டிய நிலையிலேதான் நாடு இருந்து வருகிறது.
அரசியல் பொது அறிவும் பொருளாதாரத்துறை நுண்ணறிவும் கொண்ட சமுதாயம் இந்தப் போக்கை, அபாயம் நிறைந்தது என்று கண்டிக்கவும் இந்த நிலைமைக்குக் காரணமாக இருந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் கட்சியின் ஆதிக்கத்தை அகற்றவும் தயங்காது.
இன்று நமது நாட்டிலே அந்த நிலையில், சமுதாயம் இல்லை. சர்க்கார் பட்ட கடன் என்றால் அது ஏதோ மக்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு தனி விஷயம் என்று எண்ணிக் கொண்டுவிடும் மக்கள் மிகுதியாக இருக்கிறார்கள்—இன்று.
இதே நிலையில்தான் சமுதாயம் எதிர்காலத்திலும் இருக்கும் என்று எவரும் கூறிட முடியாது.
நமது கழகமும், முற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட பிற அரசியல் அமைப்புகளும், மக்களிடம், உண்மை நிலையை எடுத்து விளக்கியபடி இருக்க வேண்டும். விளக்கிக்கொண்டு வருவது, உடனடியாகப் பலன் தராது போகலாம்—இடையிலே தருமபுரிகள் தோன்றலாம்—ஆனால், மெள்ள மெள்ள மெய்யறிவு சமுதாயத்திலே இடம்பெற்றே தீரும்; அப்போது இவைகளுக்கெல்லாம் மக்கள் ‘கணக்குக்’ கேட்பார்கள்!, ஜன-:அ.க.—11