பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

167

ரஷியாவில் பேசிக்கொண்டிருக்கும் அதே நாட்களில், இந்தியாவுக்கு அதிக அளவில் உதவிசெய்யும்படி, மற்றொரு மேத்தா,—ஜி. எல். மேத்தா—அமெரிக்காவில் பேசிக்கொண்டிருந்தார்.

மே திங்கள் 11, 12 நாளிதழ்களைப் பார்த்தால், இருவேறு நாடுகளில் இருவேறு மேத்தாக்கள் இந்தியாவுக்கு உதவி அளிக்கும்படி உருக்கத்துடன் வேண்டிக்கொண்ட செய்திகளைக் காணலாம்.

அதே இதழ்களில் மின்னல் வேகச் சூறாவளியார், அமெரிக்காவைத் தூக்கி ஆறுகாததூரம் வீசிப்போட்டு விட்டு, சோவியத் ரஷியாவுடன் சரசமாடிடும் விந்தைப் பேச்சுப் பேசியதையும் காணலாம்.

இவைகளுக்குள் உள்ள முரண்பாடுகளை இங்கு உள்ள மக்கள் அவ்வளவாகக் கவனிக்கமாட்டார்கள்; அவர்களில் மிகப்பலர் இன்னமும் அண்டத்தை ஆதிசேஷன் தாங்குகிறார் என்பதையும், அரிபரந்தாமன் திருப்பாற்கடலில் ஆலிலைமீது பள்ளிகொண்டிருக்கிறார் என்பதையும் ‘இருந்தாலும் இருக்கும்’ என்று ஏற்றுக் கொண்டுள்ளவர்கள்!

ஆனால், விவரம் தெரிந்தவர்கள், விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

நான், தம்பி! அந்த முரண்பாடுபற்றிக்கூட இப்போது குறிப்பிடவில்லை; நான் கேட்பதெல்லாம் கடன் சுமை ஏறிக்கொண்டே வருகிறதே. கடனைத் திருப்பிக் கொடுத்திடத்தக்க முறையில், வருவாய் தரும் தொழில் அமைப்பு ஏற்படவில்லையே, இதற்கு இன்று அரசாளும் காங்கிரசார் என்ன சமாதானம் கூறுகிறார்கள் என்பதுதான்.

தம்பி! சர்க்காரிடம் பெற்ற கடன் மட்டுமல்ல; ஏராளமான வெளிநாட்டு முதலாளிகள், குறிப்பாக அமெரிக்க முதலாளிகள், முதல் போட்டு இங்கே தொழில் நடத்தி, இலாபத்தைக் கோடிக்கணக்கில் தத்தமது நாடுகளுக்குக் கொண்டு செல்கிறார்கள். இங்குள்ள ‘முதலாளிகளுடன்’ கூட்டுச்சேர்ந்து தொழில் நடத்துகிறார்கள்; இலாபம் குவித்தபடி இருக்கிறார்கள்.