168
இவை யாவும் எதிர்காலத்தில், இந்த நாட்டின் பொருளாதார யந்திரத்தின் சூத்திரதாரிகளாக வெளிநாட்டார்களே ஆகிவிட்டுள்ளனர் என்ற பேராபத்தை மூட்டிவிடலாம்.
இப்போதே, சுயராஜ்யத்துக்கு முன்பு இருந்ததைவிட, மிக அதிகமான அளவு, பிரிட்டிஷ் அமெரிக்க முதலாளிமார்களின் ஆதிக்கம் இங்கு வளர்ந்துவிட்டிருக்கிறது. இதனைக் காங்கிரஸ் தலைவர்கள் மறுத்திட முடியாது.
கடனும் நிரம்ப வாங்கி இருக்கிறார்கள்; பெரிய பெரிய தொழில்களிலும் வெளிநாட்டாரின் பிடி அதிகமாகி வந்திருக்கிறது, இந்தியப் பேரரசு துவக்கி நடத்தி வரும் தொழில்களில், மகிழத்தக்க வருவாய் கிடைக்கவில்லை; ஊழல் ஊதாரித்தனம் காரணமாகப் பல அமைப்புகளிலே நட்டம் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
இவை பெருமை தரத்தக்கவைகளா?
பாருங்கள் எமது ஆட்சித் திறமையை என்று கூறி காங்கிரஸ் தலைவர்கள் மார்தட்டிக் கொள்ளத்தக்கவையா?
இவற்றைச் செய்திடும் ஒரு கட்சி, மக்களின் ஆதரவைப் பெறுவதற்கேற்ற தகுதியைக் கொண்டதுதானா?
இந்தக் கேள்விகள் இன்று பெரும்பாலான மக்களின் மனத்தைக் குடையாமலிருக்கலாம்; ஆனால், மக்கள் இவை பற்றி என்றைக்குமேவா சிந்திக்கமாட்டார்கள்?
தம்பி! மக்களை இந்த விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கச் செய்யவேண்டிய பொறுப்பைத்தான் கழகம் மேற்கொண்டிருக்கிறது; அதனைத்தக்க முறையில் நடத்திக்கொண்டும் வருகிறது.
எனவேதான் காமராஜர், மாதத்தில் இருபது நாட்கள் நான் தமிழ் நாட்டிலே சுற்றுப் பயணம் செய்யப் போகிறேன் என்று அறிவிக்கிறார்.
இதைவிடப் பெருமை தரத்திக்க ‘சான்று’ வேறு தேவையில்லை, நமது கழகத்துக்கு.