பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

171

நன்மதிப்பும் பெறமுடியாது, கட்சியின் எதிர்காலத்தையும் செம்மைப்படுத்திக்கொள்ள முடியாது.

இப்போது நடைபெற்று முடிந்த சூறாவளிபோலத்தான் மேலும் பல சூறாவளிகள் நடக்கும். அதுதான் மாதத்தில் இருபது நாட்களுக்கு என்றால், மேளதாளம், தீவட்டி மத்தாப்பு, கோச்சு மோட்டார், பூக்கடை பழக்கடை, மூங்கில் துணிமணி, ஒலிபெருக்கி அச்சகம் இவைகளுக்கு வருவாயும், பல செல்வவான்களுக்குச் செலவும், மக்களுக்கு நேரக்கேடும் ஏற்பட முடியுமே தவிர, வேறு உருப்படியான பலன் ஏற்படாது.

காமராஜர், தாராளமாக அதைச் செய்து பார்க்கட்டும்.

மாதத்தில் இருபது நாட்கள் நான் தமிழ் நாட்டில் இருக்கப்போகிறேன் என்று அவர் சொல்லும்போதே, இந்தியப் பேரரசின் தலைவர்களின் நினைவு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதுதான் இயற்கையிலேயே செல்லும். ஏனெனில், எத்தனை கசப்பானதாக இருப்பிலும், உண்மையை அவர்களும் ஒப்புக்கொண்டாக வேண்டுமே; தமிழகத்தில் பல எதிர்கட்சிகள் இருந்தாலும், திராவிட முன்னேற்றக்கழகம்தான் முன்னணியில் நிற்கிறது என்ற உண்மையை. ஆக, காமராஜர் மாதத்தில் இருபது நாள் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்கிறார் என்றால், என்ன பொருள்கொள்ள முடியும்? திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலிவு அந்த அளவு இருக்கிறது என்பதைத்தானே!

இங்கே மந்திரிகள் இருக்கிறார்கள்; தலைவர்கள் நிரம்ப! புதிதுபுதிதாக!! பேச்சாளர்கள் புதுப்புது பூச்சுகளுடன்!!-இவ்வளவு இருந்தும், ‘பெரிய மேளம்’ வந்தாக வேண்டும் என்ற நிலைமை! அதுவும் ஒருவேளை இரண்டு வேளைக்கு அல்ல; ஒருநாள் இரண்டு நாளைக்கு அல்ல; மாதத்தில் இருபது நாட்களுக்கு!! அவ்வளவு வேலை இருக்கிறது. இங்குள்ள காங்கிரஸ் மந்திரிகளும் தலைவர்களும், பேசுகிறார்கள், நித்தநித்தம்; காரசாரமாக!! ஆனால், காமராஜருக்குத் திருப்தி ஏற்படவில்லை. மக்களை வசப்படுத்த இவர்களால் முடியவில்லை என்று எண்ணுகிறார், மறைமுகமாக அதை எடுத்தும் காட்டுகிறார். காட்டிவிட்டுக் கூறுகிறார், நான் வருகிறேன்,