172
நானே வருகிறேன், மாதத்தில் இருபதுநாள் வருகிறேன் என்று.
மாதத்தில் இருபது நாள், காங்கிரஸ் கூட்டம் நடக்கும் என்று அல்ல,
மந்திரிகளும் காங்கிரஸ் பேச்சாளர்களும் கூட்டம் நடத்துவார்கள் என்று அல்ல,
- நான் வருகிறேன்!
- நானே வருகிறேன்!
என்பதாகப் பேசுகிறார்.
பெரிய டாக்டரே வரப்போகிறார், இங்கேயே தங்கி இருந்து வைத்தியம் செய்யப்போகிறார் என்பது, நோயாளியின் நிலைமை அத்தனை மோசமாகிவிட்டிருக்கிறது என்பதற்குத்தானே அடையாளம்?
அதுபோலத்தான், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை, ‘பெரிய டாக்டர்’ வந்து தீரவேண்டிய விதமாக ஆகிவிட்டிருக்கிறது.
இருபது நாட்கள் அல்ல, மாதம் முழுவதும் இங்கேயே இருந்து, பேசி வந்தாலும், ஆட்சிமுறை இன்றுள்ளது போல, மக்களை வாழவைக்காததாக, ஊழல் ஊதாரித்தனம் நெளிவதாக, முதலாளிகளைக் கொழுக்கவைப்பதாக, கடன் பளுவை அதிகப்படுத்துவதாக, சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே கடன் வாங்கும் முறையினதாக இருந்து வரும் வரையில்,
ஊர்க்குடி கெடுப்பவர்களும், முதலாளிகளும், கள்ள மார்க்கட்காரரும் கொள்ளை இலாபம் அடிப்பவனும், கொள்கை அறியாதவனும் பிடி ஆட்களும், பேரம் பேசிகளும் சோரம் போனவர்களும், காங்கிரஸ் கட்சியின் நடு நாயகங்களாக இருந்து வரும் வரையில், மாதத்தில் இருபது நாளென்ன, முப்பது நாளும் இங்கே முகாமடித்தாலும், பலன் என்ன கிடைத்துவிடும்! பச்சை வண்ணம் பூசி, கழுகைக் கிளியாக்கிவிட முடியுமா, பளிங்குப் பாத்திரத்தில் ஊற்றித் தருவதால் காடி, பாலாகிவிடுமா?