பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

173

ஒரு பலன், உருப்படியான பலன், காமராஜர் அறிவித்துள்ள திட்டத்தின்படி கிடைப்பது, கழகத்தின் வளர்ச்சியின் அளவு இந்தியப் பேரரசுக்குப் புரிகிறதே அதுதான். அந்த மகிழ்ச்சி எனக்கு!!

அரசியல் நிலைமைகளை, ஆட்சியாளர்களால் ஏற்படும் கேடுபாடுகளை மக்களிடம் எடுத்துக் கூறிவருவது மகத்தான ஜனநாயகக் கடமை. அந்தக் கடமையைச் செய்து வருகிறது கழகம்; அதனை எதிர்த்து இருபது நாள் சுற்றுப்பயணம் மட்டும் செய்து பலன் காண எண்ணுவதைவிட, ஆட்சி முறையைத் திருத்த வழி என்ன என்று யோசிக்க ஒருநாள், காங்கிரஸ் கட்சிமீது மக்கள் வெறுப்புக்கொள்ளத்தக்க நிலைமையை உண்டாக்கி வைப்பவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் காங்கிரசின் செல்வாக்கைப் பயன்படுத்தித் தமது சுயநலனைப் பெருக்கிக் கொள்கிறார்களே, அதனை ஒழிப்பது எப்படி என்பதற்கு ஒருநாள், உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின் கொட்டம் வளர்ந்து வருகிறதே அதனை அடக்கிட ஒடுக்கிட வழி என்ன என்பதுபற்றி யோசிக்க ஒருநாள், சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே மீண்டும் கடன் வாங்கும் போக்கிலே அரசு நடந்துகொள்கிறதே, அதனைத் திருத்துவது எப்படி என்பது பற்றி யோசிக்க ஒருநாள் என்ற முறையில், மிச்சமிருக்கும் பத்து நாட்களையாவது காமராஜர் பயன்படுத்தினால், நல்லது. நான் சொல்லியா அவர் கேட்பார்! ஏ! அப்பா! அவர் எவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார்!! என் பேச்சு காதில் விழுமா!

நான் சொல்வது அவருடைய காதிலே வீழ்ந்தாலும் வீழாவிட்டாலும், தம்பி! உன் செவிவழி நுழைந்து நெஞ்சிலே நிறைந்திருந்தால், அது போதும் எனக்கு. அதனால்தான் உன்னிடம் சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே மறுபடி கடன் வாங்கும் போக்கிலே காங்கிரஸ் அரசு நடந்துகொண்டு வருவது பற்றிச் சொன்னேன். பட்டம், பதவி, பர்மிட்டு, லைசென்சு இவைகளுக்காக ஏங்கிக் கிடப்பவர்கள், பதவிப் பல்லக்கினைச் சுமந்து திரிந்தால் பாகும் பருப்பும் சுவைக்கக் கிடைக்கும் என்று நினைத்துக் காத்துக் கிடப்பவர்கள், ஐயோ! நம்மால் ஆகுமா? என்று அஞ்சிக் கிடப்பவர்கள், விளைந்த காட்டுக் குருவிகள், ஒளிவீழ்ந்து